செய்திகள்

முகாம்களில் வாழும் சம்பூர் மக்களை நேரில் பார்வையிட மீள்குடியேற்ற அமைச்சருக்கு வேண்டுகோள்

மூதூர் பிரதேசத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் நீண்ட காலமாக மன வேதனையுடன் வாழும் சம்பூர் மக்களின் நிலையினை அவர்களின் அவலங்களை நேரில் வந்து பார்வையிடுமாறு மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ. இ. பாஸ்கரன் குருக்கள், மீள் குடியேற்றம் புனர்வாழ்வு இந்து மத விவகார அமைச்சர் டீ.எம். சுவாமி நாதனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எமது மூதுர் பிரதேச இந்து குருமார் சங்கமானது 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சமூக நலன் விரும்பிகளின் உதவிகளுடன் சமயப் பணிகளையும், சமூகப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் இதுவரை எமது சங்கத்திற்கு அரசாங்கமோ, திணைக்களங்களோ எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை. நாங்கள் நலன்புரி முகாம்களில் உள்ள சம்பூர் மாணவர்களுக்கு அறநெறிப் பாடசாலைகளை நடத்தி வருகின்றோம். எம்மால் முடிந்த சிறு உதவிகளை சம்பூர் மக்களுக்கு செய்து வருகின்றோம்.

எனவே இந்த நிலையில் அவலப்படும் சம்பூர் மக்களை தாங்கள் வருகை தந்து பார்வையிட வருமாறு சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.