செய்திகள்

முதலமைச்சரின் நடவடிக்கைகளும் தீர்மானமும் பூரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது: சிவாஜிலிங்கம்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனஅழிப்பு தீர்மானம் பூரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக இந்த தீர்மானத்தை கடந்த வருடம் சபையில் முன்மொழிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது வட மாகாண சபையின் உறுப்பினராகவும் இருக்கும் எம். கே . சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுளார்.

தீர்மானத்தை சபையில் சமர்ப்பித்து முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தன்னையே தன்னால் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததாகவும், அந்த உரையில் அவர் பல விடயங்களை உணர்வுபூர்வமாகவும் அடிமனதில் இருந்து மிகவும் ஆழமாகவும் இலங்கையின் புதிய அரசாங்கத்தை பற்றியும் அவர்களது செயற்பாடுகளைப் பற்றியும் சர்வதேச சிந்தனைகளைப் பற்றியும் வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகளம் செய்திகளுக்கு அவர் இன்று அளித்த பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின் விபரம் வருமாறு.

கேள்வி. வட மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தீர்மானத்தை கடந்த வருடம் முன்மொழிந்து அதனை நிறைவேற்றுவதற்கு வலியுறுத்தியவர் என்ற வகையில் உங்கள் மன நிலை இப்போது எவ்வாறு இருக்கிறது?

பதில்: கடந்த ஒரு வருடம் இந்த தீர்மானம் இழுபறி நிலையில் இருந்தாலும் தற்போது மிகவும் சரியான தருணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ. நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை தாமதிக்கும் நடவடிக்கைகள் நடைபெறும் இந்த சந்தர்பத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமானதும் பொருத்தமனதுமாகும். இது எனக்கு முழு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

கேள்வி: நிறைவேற்றப்பட்ட தீர்மான வரைவு தயாரிக்கப்படுவதற்கு பேராசிரியர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதாக முதலமைச்சர் கூறியிருந்தார். இதைப்பற்றி கூறமுடியுமா?

பதில்: கடந்த ஆண்டு நான் ஜெனீவாவுக்கு சென்றிருந்தபோது அங்கு இன அழிப்புக்கு எதிரான ஆணையாளர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்ருந்தேன். அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பல ஆவணங்களின் அடிப்படையிலும் அதன்பின்னர் பல்வேறு நாடுகளிலும் உள்ள நிபுணர்களினதும் ஆலோசனைகள் மற்றும் உதவிகளுடன் தான் இந்த தீர்மான வரைபு தயாரிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் இதுதொடர்பில் பல்வேறு தரப்பினரையும் அணுகி அவர்களது ஆலோசனைகளை பெற்று செயற்பட்டிருந்தார்.

கேள்வி : இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற வரைவிலக்கனத்துக்குள் வராது என்று தெரிந்தும் வட மாகாண முதல்வர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாகவும் இதனை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் கூறியிருப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

பதில்: இனஅழிப்பு என்பதற்கு வரைவிலக்கணம் எடுத்துரைக்கப்பட்டே அதனடிப்படையில்
இலங்கையில் நடந்தது இன அழிப்புத்தான் என்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். சுதந்திரம் அடைந்த காலம் முதல் தமிழ் மக்களுக்கு எதிராக, மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களினால் எவ்வாறு படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன எத்தகைய அடக்குமுறைகள் மேற்கொள்ள்ளப்பட்டன என்பவற்றை எல்லாம் விளக்கியே இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆதலால், தமிழ் மக்களை இந்த இன அழிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

கேள்வி: கடந்த வருடம் இந்த தீர்மானத்தை நீங்கள் முன்வைத்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை ஏற்காததுடன் இத்தகைய ஒரு தீர்மானத்தை வட மாகாண சபையில் நிறைவேற்றுவது பொருத்தம் அற்றது என்றும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் கூறியிருந்த நிலையில், எவ்வாறு இந்த தீர்மானம் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது?

பதில்: இது எந்த அடிப்படையும் அற்ற கூட்டமைப்பின் ஒரு சிலரது கருத்தே ஆகும். இதனை நாங்கள் கவனத்தில் எடுக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த 33 மாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்து இட்டே இந்த தீர்மானத்தை கோரியிருந்தோம். இது மிகப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் முழுமனதுடன் இந்த தீர்மனத்தை நிறைவற்றினார்கள்.

கேள்வி: இந்த தீர்மனத்தை நிறைவேற்றுவதில் வட மாகாண முதலமைச்சர் செயற்பட்ட விதம் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பதில் : முதலமைச்சரின் நடவடிக்கைகள் எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. என்னையே நம்ப முயாத அளவுக்கு அவர் பல விடயங்களை உணர்வுபூர்வமாகவும் அடிமனதில் இருந்து மிகவும் ஆழமாகவும் அவர் இலங்கையின் புதிய அரசாங்கத்தை பற்றியும் அவர்களது செயற்பாடுகளைப் பற்றியும் சர்வதேச சிந்தனைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மக்களின் நலன்களின் பால் அக்கறை உள்ள பல அரசியல் முக்கியஸ்தர்கள் இந்த தீர்மானத்துக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளளர். குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். காலம் அறிந்து செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான அரசியல் செயற்பாடு இது என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சர்வதேச சமூகம் தமிழ் மக்களை கைவிட்டு விடுமோ என்று தாயாக, புலம்பெயர் மற்றும் தமிழக தமிழர்கள் தமிழர்கள் அச்சம் கொண்டுள்ள இந்த வேளையில் நம் எல்லோருக்கும் புத்துத் தெம்பும் மன நிறைவும் திருப்தியும் அளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தினை நிறைவேற்றி வைத்துள்ள முதலமைச்சருக்கு நாம் இந்த சந்தர்ப்பத்தில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.