செய்திகள்

முன்ஜாமீன் கோரி நடிகை அல்போன்சா மனு

நடிகை அல்போன்சா மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, முன் ஜாமீன் கோரி அல்போன்சா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், ஜெய்சங்கர் என்பவருடன் 2013-ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு எனது கணவர் பல நாள்கள் வீட்டுக்கு வராமல் இருந்தார். ஒரே ஒரு நாள் மட்டுமே என்னுடன் வாழ்ந்தார்.

இதற்கிடையில், முகநூலில் தன் மனைவி அல்போன்சா என்று கூறி படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். எனவே, என் கணவரை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என சுமித்ரா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கருதி தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகை அல்போன்சா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.