செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் மோஹான் பீரிஸ் மீது விசாரணை

ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி மோகன் பீரிஸுக்கு எதிராக விசாரனை மேற்கொள்ளப்படுமென்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி மோகன் பீரிஸ் சட்ட மா அதிபராக செயல்பட்டபோது, அவர் இலங்கை சுங்க தினைக்களத்திற்கு விடுத்த உத்தரவொன்றின் முலம் அரசாங்கத்திற்கு சுமார் 619 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு ஊழல் விசாரணை ஆணைக் குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி வழக்கறிஞர் நாகஹனந்த கொடிதுவக்கு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கருத்துக்களை தெரிவித்த வழக்கறிஞர் கொடிதுவக்கு, முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதாக ஊழல் விசாரணை ஆணைக் குழு தனக்கு எழுத்து முலமாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே, இந்த மனுவை மேற்கொண்டு விசாரணை செய்வது அவசியமில்லை என்று கூறிய கொடிதுவக்கு, ஊழல் விசாரனை ஆணைக்குழு முறையாக இந்த விசாரணைகளை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் தான் வழக்கைத் தாக்கல் செய்வதாகவும் அறிவித்தார்.

இதன் படி இந்த மனுவை ஜூலை மாதம் 27 தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்று இந்த வேண்டுகோள் ஆராயப்படுமென உத்தரவிட்டது.