செய்திகள்

முள்ளிக்குளம் மீள்குடியேற்ற விவகாரம்: கோட்டாபயவுடன் மன்னார் ஆயர் பேச்சு

மன்னாரில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிக்குளம் பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் மன்னார் ஆயருடன் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் மன்னார் ஆயர் கூறுகையில், “மன்னாரில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் பல வருடங்களாக முள்ளிக்குளம் பகுதி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்த தமிழ் மக்கள் தொடர்ந்து அகதி வாழ்வு வாழ்கின்றனர். 2012ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நாம் நடத்திய சந்திப்பின்போது இந்தப் பகுதியை கடற்படையினர் உடனடியாக விடுவிப்பர் என அவர் எமக்கு உறுதியளித்தார்.

ஆனால், அந்த வாக்குறுதி இரண்டு வருடங்களாகியும் நிறைவேறவில்லை. இந்நிலையில், நாம் மீண்டும் அவரை சந்தித்து கடற்படையினரை முள்ளிக்குளம் பகுதியில் இருந்து உடனடியாக விலக்கி அந்தப் பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம்” என்றார்