செய்திகள்

முள்ளிவாய்காலில் வைத்து முதலமைச்சருடன் பேசிய ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

முள்ளிவாய்க்கால் நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்தபோது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி, நிகழ்வுகளை நடத்துவதில் இடையூறுகள் ஏதாவது எதிர்கொள்ளப்பட்டதா என விசாரித்தறிந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் முள்ளிவாய்காலைச் சென்றடைந்த போதே, முதலமைச்சரின் கைப்பேசிக்குத் தொடர்பை ஏற்படுத்திய டேவிட் டெலி, முள்ளிவாய்கால் பகுதியை வந்தடைவதில் இடையூறுகள் ஏதாவது எதிர்கொள்ளப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இடையூறுகள் எதுவும் இருக்கவில்லை எனவும், நிழ்வுகள் அனைத்தும் சுமூகமாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

நாளை மாத்தறையில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு கூட ஒரு வெற்றி விழாவாக அல்லாமல் மரணமானவர்களை நினைவுகூரும் ஒரு நிகழ்வாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது எனவும் முதலமைச்சரிடம் தெரிவித்த தூதுவர், இவை அனைத்தும் சுமூகமான முறையில் நாடு செல்வதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.