செய்திகள்

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றியோரை படம்பிடித்த படைப்புலனாய்வாளர்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கடற்கரையோரம் கப்பலடிப் பகுதியில் சுடரேற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் அஞ்சலி செலுத்தினர். அச்சுறுத்தல்கள், பின்தொடரல்கள், விசாரணைகள் என்பவற்றை மீறி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக இப்பகுதிக்குச் சென்று திரும்பியோர் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை காலை தமிழ்க் கூட்டமைப்பு மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றனர். எதிர்பார்த்தது போலவே வீதியில் காத்து நின்ற புலனாய்வாளர்கள் கூட்டமைப்பினரை பின்தொடர்ந்தனர். இதனையடுத்து வேறு வழியால் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரையில் இவர்கள் இடைமறித்த படையினர் இவர்களிடம் துருவித் துருவிக் கேள்வி கேட்டனர். இவற்றைச் சமாளித்து கப்பலடி கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர்நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அங்கு படைப் புலனாய்வாளர்களும் வந்து சேர்ந்தனர். அங்கு நின்றவர்களை அவர்கள் புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையில் பொலிஸாரும் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.