செய்திகள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.வேலன் சுவாமிகளோடு இணைந்து பொதுமக்கள் சிலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இனப்படுகொலையின் நினைவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்கத்தால் ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்துக்கு அமைவாக முதலாவது ஆலமர கன்று ஒன்றும் இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகளால் நடுகை செய்யப்பட்டுள்ளது .

இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்நிலையில் நேற்று இரவு முதல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.(15)