செய்திகள்

முழுமையான சர்வதேச விசாரணையையே நாம் கோருகின்றோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

“நாம் ஒரு முழுமையான சர்வதேச விசாரணையினை தொடர்ச்சியாக கேட்டிருக்கின்றோம். அதனை எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற அடிப்படையிலும் வலியுறுத்தினோம்”  எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “ஆனால் அரசாங்கம் மீண்டும் உள்ளக விசாரணைக்குள் செல்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இதில் நம்பிக்கை கொள்ள தாயாரில்லை” எனவும் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்றையதினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் பணம் பெற்றுள்ளதாகவும், அதனை மாகாணசபை ஊடாக செய்யவேண்டும் எனவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்திருக்கின்றார். மேலும் சில ஊடகங்கள் பல மில்லியன் பணம் பெற்றுவிட்டதாக கூறுகின்றன. மேலும் சிலர் அரசாங்கத்திடம் விலைபோய் விட்டதாக கூறுகின்றார்கள். ஆனால் அதில் உன்மையில்லை.

நாம் பூநகரியில் கிணறுகள் புனரமைத்தல், சிறிய குளங்கள் மற்றும் வடிகால்கள் புனரமைத்தல் ஆகியவற்றுக்காக 5 மில்லியன் ரூபா நிதியையும், வலி, கிழக்கு பகுதியில் 8 வீதிகளை புனரமைப்பதற்காக சுமார் 40 மில்லியன் ரூபா நிதியையும் நாம் கேட்டிருந்தோம். இதனை மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஊடாக ஒதுக்கீடு செய்து அதனை இரு மாவட்டங்களுக்கும் உரிய அரசாங்க அதிபர்கள் செயற்படுத்துவார்கள். இதற்கு மேல் நாம் அரசாங்கத்திடம் விலை போகவுமில்லை. அரசாங்கம் விலைக்கு வாங்கவுமில்லை.

இந்நிலையில் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்றிட்டங்களை கொடுத்தார்களா? வாகனங்களை பெற்றார்களா? என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அதற்கு அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே கேட்கவேண்டும்.

அரசாங்கம் 3வது தடவையாக தேர்தல் மறுசீரமைப்பை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அனுப்பியிருக்கின்றது. இதில் 237 ஆசனங்கள் எனவும் அதில் 145 ஆசனங்கள் தொகுதிவாரி ஆசனங்கள் எனவும், 55 ஆசனங்கள் விகிதாசார ஆசனங்கள் எனவும் மிகுதி 37 ஆசனங்கள் தேசியப்பட்டியல் ஆசனங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனால் தொகுதிவாரி தேர்தலுக்காக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதா? எங்கு செய்யப்படும் எப்போது செய்யப்படும் என்பது பற்றிய செய்திகள் இல்லை. இதற்கும் மேலதிகமாக யாழ்.மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகள் இருந்தது. பின்னர் விகிதாசார பிரதிநிதித்துவம் வந்தபோது அது 9 ஆக மாறி பின்னர் சனத்தொகை அடிப்படையில் 7 ஆக மாறி மீண்டும் 6 ஆக மாறும் அபாயத்தில் உள்ளது.

இந்நிலையில் சிறுபான்மை இனங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் நிலையில் உள்ளது. எனவே நாம் அரசாங்கத்திடம் கேட்டிருக்கின்றோம். வடகிழக்கில் தற்போதுள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கையினை 15 வருடங்கள் நீடிக்குமாறு. அவ்வாறு இடம்பெறாது போனால் சிறுபான்மை இனங்களை இந்த புதிய தேர்தல் மறுசீரமைப்பு மிகமோசமாக பாதிக்கும்.

ஐ.நாவின் சர்வதேச விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டிய நிலையில் எதிர்வரும் செம்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தான் ஒரு உள்ளக விசாரணையினை செம்டெம்பர் மாதத்தில் நடத்தப்போவதாக கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் ஒரு முழுமையான சர்வதேச விசாரணையினை தொடர்ச்சியாக கேட்டிருக்கின்றோம். அதனை எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற அடிப்படையிலும் வலியுறுத்தினோம். ஆனால் மீண்டும் உள்ளக விசாரணைக்குள் செல்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இதில் நம்பிக்கை கொள்ள தாயாரில்லை. முன்னர் நடைபெற்ற பல உள்ளக விசாரணைகளில் நமக்கு நம்பிக்கையில்லை.

விசாரணை கொமிசன் நியமிக்கப்பட்டபோதும் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை. போர் குற்றச்சாட்டில் முக்கிய நபரான டயஸ் என்பவர் தற்போது முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அரசு மீது தமிழ் மக்களுக்கும் எமக்கும் நம்பிக்கையில்லை. எனவே உள்ளக விசாரணை நம்பிக்கையற்றது என்பதை சர்வதேசத்திற்கு கூற விரும்புகிறோம்.