செய்திகள்

முஸ்லிம்களின் புனிதப் பகுதிக்குள் அத்துமீறிய ‘சிங்கள ராவய’: பொலிஸார் தாக்குதல்

பலாங்கொட, குரகலவில் உள்ள முஸ்லிம்களின் புனித பூமிக்குள் அத்துமீறி செல்ல முற்பட்ட சிங்கள ராவய அமைப்பினர் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நண்பகல் பலாங்கொடை குரகல பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. முஸ்லிம்களின் புனித பூமியும், தொல்பொருள் நிலையமாகவும் பராமரித்துவரும் குரகல பகுதியில் அமைந்துள்ள இடத்திற்கே  சிங்கள ராவய அமைப்பினர் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட அதேவேளையில், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

நேற்று காலை முதல் குறித்த பகுதியில் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தலைமையிலான சுமார் 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தொல்பொருள் பாதுகாப்பு நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர். இப்பிரதேசத்துக்குள் நுழையகூடாது என பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று அதனை அறிவித்துள்ளனர். இதனைமீறி சிங்களராவய அமைப்பினர் நுழைய முயன்றுள்ளனர். இதனையடுத்து தண்ணீர்  பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டத்தை கலைத்தாக பொலிஸ் ஊடக பிரிவுத் தினக்குரலுக்கு கூறியது.

பலாங்கொட ஜெயலானி வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிக்கு அண்மையில் இருக்கும் இப்பிரதேசத்தில் பல பள்ளிவாசல்கள் இருக்கின்றன. குரகல பகுதியிலுள்ள ஓர் தொல்பொருள் பாதுகாப்பு நிலையம் வரலாற்று ரீதியில் சிங்களவர்களுக்கே உரியது என சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்துள்ளதுடன் புத்தர் சிலையுடன் உள்ளே நுழைய முயற்சித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளே நுழைந்தவர்களை தடுக்க நடத்திய தண்ணீர் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒரு நபரை பொலிஸார் கைது செய்து பின்னர் பொலிஸ் பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

மேலும், கடந்த வருடமும் சிங்களராவய அமைப்பினர் இந்த பகுதியில் அத்துமீறி செயற்பட்டதாகவும் தெரியவருகிறது. முஸ்லிம்களது தொல்பொருள் பொருட்கள் அவ்விடத்தில் பாதுகாக்கப்பட கூடாது. இது சிங்கள பௌத்தர்களிற்குரிய இடமெனக் கூறி கடந்த வருட நடுபகுதியில் இவ்வாறு அத்துமீறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் மத்திய  மாகாண சபை உறுப்பினர்  அசாத்சாலி  ஆகியோர் குறித்த பகுதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.