செய்திகள்

கிழக்கு மாகாண விவகாரம்: முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்க ஐ.ம.சு.மு முடிவு

சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.ம.சு.மு. வின் குழுக் கூட்டம் இன்று மாலை கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட பலரும் கலரும் கலந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட மற்றும் இரு முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி முதலமைச்சர் பதவியை அவர்களுக்கு வழங்குவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் நஜீப் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடந்த 3 வாரகாலமாகத் தொடர்ந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்துக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.