செய்திகள்

மூதூர் படுகாடு பகுதியில் காணி உரிமை தொடர்பில் தமிழ்- சிங்கள விவசாயிகளிடையே சர்ச்சை

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியிலுள்ள ஒரு பகுதி வயல் நிலங்களின் உரிமை தொடர்பாக தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகளுக்கிடையிலான சர்ச்சை தொடர்கின்றது.

காணி உரிமை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் வரை சர்ச்சைக்குரிய காணியில் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காணி உரிமை தொடர்பாக ஆராய்வதற்காக விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் இன்று வியாழக்கிழமை படுகாடு வயல் பகுதியில் சந்திப்பொன்று இடம் பெற்றது.

அந்த கூட்டத்தில் தீர்வுகள் எதுவும் கிடைக்காததையடுத்தே அதிகாரிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மூதூர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லையாக படுகாடு பகுதி உள்ள போதிலும் அதன் நிர்வாகம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டது.

போர் காலத்தில் தமிழ் விவசாயிகள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டு வந்த சிங்கள விவசாயிகள் தொடர்ந்தும் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டு வருவதையடுத்தே தங்களின் காணி உரிமை மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் கூறுகின்றார்கள்.

காணி உரிமை தொடர்பான சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாபகவும் அவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணிகளில் தொடர்ந்தும் வேளாண்மை செய்கைகளில் ஈடுபட்டுவருவதால் அரச முடிக்குரிய காணி என்பதில் அந்த உரிமை தங்களுக்கு வழங்க ப்பட வேண்டும் என சிங்கள விவசாயிகள் தரப்பு முன் வைக்கின்றது.

இந்த காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும் என கோரி சில நாட்களுக்கு முன்னர் தமிழ் விவசாயிகள் மூதூர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி விவசாய பிரதிநிதிகள்( தமிழர் -2 முஸ்லிம்-1 சிங்களவர் – 2 ) , பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு முடிவு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

Padu Paduk