செய்திகள்

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் முழுவிவரம் வருமாறு:-
நீண்டகாலமாக தமிழ் அரசியல் கைதிகளாக எம்முடன் இருந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் போதிய விரைவு மருத்துவ சேவையின்றி 14.05.2015 அன்று உயிரிழந்த சக நண்பன் சுந்தரம் சதீஸ் அவர்களின் இழப்பு எம்மைப் பெரிதும் துன்பமடைய வைத்துள்ளது.
அதுதவிர இதற்கு முன்னரும் அமரர்களான தெய்வேந்திரம், நெல்சன், கோபி போன்ற தமிழ் அரசியல் கைதிகளும் இவ்வாறே உடனடி மருத்துவ சேவையின்றி சிறைக்குள் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நெடுஞ்சிறை வாழ்வை அனுபவித்து மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. எனவே இவற்றுக்கான தீர்வை வலியுறுத்தி ஒரு நாள் உணவுத் தவிர்ப்பை மேற்கொள்ள எண்ணுகிறோம்.
அந்த வகையில் –
1) தகைமை வாய்ந்த மருத்துவர்களால் நோயாளிக் கைதி ஒருவருக்கு பரிந்துரைக்கப்படும் மருத்துவ சேவைகளை வழங்குவதில் சிறைச்சாலை நிர்வாகம் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
2) குறித்த நோயாளிக் கைதியை மேலதிக சிகிச்சையின் பொருட்டு வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் இருந்து தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லவேண்டும் என வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கடைப்பிடிக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
3) கைதி ஒருவர் நோய்த்தாக்கத்துக்கு ஆளாகும் சந்தர்ப்பத்தில் துரிதமாகச் செயற்பட்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதிலும் பார்க்க சிறைத்துறையினர் தமது நிர்வாக நடவடிக்கை ஒழுங்குகளுக்கே முன்னுரிமை அளிப்பது கவலைக்குரியது. இச்செயற்பாடு சிறைக் கைதிகளின் உயிர்ப்பெறுமதியை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிறைச்சாலைத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன் நிர்வாகக் குறைபாடு காரணமாக சிறைக்கூடங்களுக்குள் இடம்பெறும் அநியாயச் சாவுகளுக்கும் சிறை நிர்வாகமே பொறுப்புக்கூறவேண்டும்.
இவற்றை வலியுறுத்தி  நாளை 16.05.2015 ஒரு நாள் அடையாள உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு தமிழ் அரசியல் கைதிகளான எமது கவனயீர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம்.
அத்துடன் அமரர் சதீஸ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொண்டு அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். – என்றுள்ளது.