செய்திகள்

மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது : வட மாகாண பிரதி அவைத்தலைவர்

மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் வலியுறுத்தவிருப்பதாகவும் வட மாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட விசேட தேவைக்குட்பட்ட 22 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துதெரிவித்த அவர்,

எமது மக்கள் இப்போது தெளிவான அரசியல் சிந்தனையை கொண்டுள்ளார்கள். சுயநலத்திற்காகவும் அடுத்துவரும் தேர்தலை முன்னிலைப்படுத்தி வேலைசெய்யும் அரசியல்வாதிகளை நன்கு புரிந்துவைத்துள்ளார்கள்.

எனது தனிப்பட்ட கருத்து இனிவரும் காலங்களில் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகித்தவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதுதொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமையிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளேன்.

இன்று புதிய அரசியல் கலாசாரம் தோன்றியுள்ளது. இளைஞர் சமூகத்திற்கு இடத்தை விட்டுக்கொடுக்கவேண்டியது எமது கடமையாகும் என்று கூறினார்.