செய்திகள்

மைத்திரிக்கு ஆதரவளித்த மாகாண சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! காவலாளி காயம்!!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்த வடமேல்மாகண உறுப்பினர் லக்‌ஷ்மன் வெதவெலவின் இல்லத்தின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குருநாகலிலுள்ள அவரது இல்லத்துக்கு இன்று அதிகாலை சென்ற சிலரே இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வட மேல் மாகாண சபைக்குத் தெரிவான லக்‌ஷ்மன் வெதவெல, தான் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக நேற்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று அதிகாலை 12.00 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு ஒன்று சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இடம்பெற்ற போது லக்‌ஷ்மன் வீட்டில் இருக்கவில்லை. வீட்டின் காவலாளி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று காலை தெரிவித்தார்.