செய்திகள்

மைத்திரிபாலவுக்கு திறக்க மறுத்த திருப்பதி கருவறை தங்கக் கதவு! உடைத்துத் திறக்க நிர்ப்பந்தம்!!

திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டது. அதனைத் திறப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைய தங்கக் கதவின் பூட்டை உடைத்து ஜனாதிபதியை வழிபாடு நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இதுபோன்றதொரு சம்பவம் இதற்கும் முன் நிகழ்ந்திருக்கவில்லை என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

001சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபாடு செய்வதற்காக நேற்று அதிகாலையில் மைத்திரிபால சிறிசேன தனது மனைவியுடன் சென்றிருந்த போது, தங்கக் கதவின் பூட்டு திறக்க மறுத்ததால், அதிகாரிகள் பெரிதும் சங்கடத்துக்குள்ளாகினர்.

அதிகாலையில் 2.15 மணியளவில், ஏழுமலையான் ஆலய பூசகர்கள் கடைசியில் உள்ள மூலஸ்தான தங்கக் கதவை திறப்பதற்காக வந்தனர். தினமும், ஏழுமலையானைத் துயிலெழுப்பும் சுப்ரபாதசேவை தான் முதலில் நடப்பது வழக்கம்.

அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் சுப்ரபாத சேவைக்காக, 45 நிமிடங்களுக்கு முன்னரே கருவறையின் தங்கக் கதவைத் திறந்து சுத்தம் செய்ய பூசகர்கள் வந்திருந்தனர். தங்கக் கதவைத் திறப்பதற்கு, அதில் உள்ள சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பூட்டில், மூன்று சாவிகளை ஒரே நேரத்தில், போட்டுத் திறக்க வேண்டும்.

ஆனால், நேற்று அதிகாலையில் முதலாவது சாவி பூட்டினுள் நுழைய மறுத்தது. மைத்திரிபால சிறிசேனவும், அவரது மனைவி ஜெயந்தி புஸ்பகுமாரியும், சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்காக, தங்கக் கதவுகள் திறக்கப்படுவதற்காக ஏற்கனவே வைகுண்ட வளாகத்துக்கு முன்பாக உள்ள மகாத்துவாரம் பகுதியில் காத்துக் கொண்டிருந்தனர்.

பூட்டைத் திறப்பதற்கான முயற்சிகள் தேல்வியடைந்த நிலையில் இறுதியில் அதனை உடைத்துத் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதிகாலையில் பூட்டு உடைக்கப்பட்டு மைத்திரிபால தம்பதியர் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.