செய்திகள்

மைத்திரியின் இந்திய விஜயத்தில் கவனத்தைப் பெறவிருக்கும் 3 விடயங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான பேச்சுக்களில் மூன்று விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது, உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், இலங்கை – இந்திய கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படும் சம்பூர் அனல் மன் திட்டம் என்பன தொடர்பாகவே முக்கியமாக ஆராயப்படும்.

தமிழகத்தில் தற்போதுள்ள சுமார் ஒரு லட்சம் வரையிலான இலங்கைத் தமிழர்களை இப்போதைக்குத் திருப்பி அனுப்புவது பொருத்தமற்றது என மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமருக்கு விழளக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகளை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன: முதலாவதாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த 26,000 பேர் உள்ளார்கள். இவர்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இவர்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்ந்தும் பிரச்சினையாகவே உள்ளது.

இரண்டாவதாக, தமிழகத்திலுள்ள அகதிகள் கடந்த 3 தசாப்த காலமாக அங்கேயே இருப்பதால்அவசரமாக அவர்களை இலங்கைக்கு திருப்பி அழைப்பது மனிதாபிமானமற்ற செயற்பாடு என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களைக் கட்டாயப்படுத்தி மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.