செய்திகள்

மைத்திரியின் இறுதிக் கூட்டத்துக்கு கடும் பாதுகாப்பு: குண்டுதுளைக்காத கூண்டில் இருந்து உரையாற்றினார்

ஜனாதிபதித் தேர்தர் பரப்புரைக் கூட்டங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், மருதானையில், நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத கூண்டுக்கள் நின்றுகொண்டே இங்கு உரையாற்றினார்.

பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டம், நள்ளிரவு வரை இடம்பெற்றது. இரவு 11.30 மணியளவில் பரப்புரை கூட்ட மேடைக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, குண்டுதுளைக்காத கண்ணாடிக்குப் பின்பாக நின்றே உரையாற்றினார். மைத்திரி 9.00 மணியளவில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டதால் பெருந்தொகையானவர்கள் அவரது உரையை எதிர்பார்த்து காத்துநின்றார்கள்.

மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்பதால், சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் நேற்றைய கூட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். அவரைச் சுற்றியும், மேடையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்களைச் சுற்றியும், மெய்க்காவலர்களும், காவல்துறை அதிகாரிகளுமே நிறைந்திருந்தனர். இதனால், மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

01

11.30 மணியவில் மேடையேறிய மைத்திரிபால சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றினார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட அவர், ராஜபக்‌ஷ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் அச்சமின்றிச் சென்று வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மொரட்டுவவில் இடம்பெற்ற மற்றொரு பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னரே அவர் மருதானைக் கூட்டத்துக்கு வந்திருந்தார். நள்ளிரவு 12.00 மணிக்கு இந்த பரப்புரைக் கூட்டம் முடிவுக்கு வந்தது. நேற்றைய இறுதிக் கூட்டத்தில் ஆளும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலராவது மைத்திரிக்கு ஆதரவளித்து மேடையேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், யாரும் அவ்வாறு கட்சி மாறவில்லை.