செய்திகள்

மைத்திரியின் விஜயத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பொதுநலவாய தின வரவேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை பிரித்தானியாவுக்கு வியஜம் செய்யவிருக்கின்ற நிலையில் அவரது வருகையை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது.

நாளை மறுதினம் திங்கட்கிழமையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் பொதுநலவாய தின வரவேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளவிருப்பதால் அன்றைய தினம் காலை 2 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இந்த ஆர்ப்பாட்டம் வெஸ்ட்மினிஸ்டர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்திருக்கிறது.

இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இனப்படுகொலையின் உச்சமான காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரி. 70 000 இற்கு மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலைக் கூட பழைய, புதிய ஆட்சியாளர்கள் வெளிவிட மறுக்கின்றார்கள். தமிழின அழிப்புக்கு காரணமானவர்கள் புதிய முகமூடியுடன் வலம் வருகின்றார்கள். எம் இனத்தின் மீதான படுகொலைக்கு காரணமான அணியில் முக்கியமான பாத்திரம் வகித்தவர்கள் இன்றைய ஜனாதிபதியாகவும் ஆட்சியாளர்களாகவும் கூட்டாக பாத்திரம் ஏற்றுள்ளார்கள். அது மட்டுமல்ல சர்வதேச விசாரணையை மறுதலித்து உள்நாட்டு விசாரணையை தாமே செய்யப் போவதாக சர்வதேசத்திற்கு வேடம் போடுகின்றார்கள். கொலையாளியே நீதிபதியாக வந்தால் நீதி கிடைக்குமா?

ஆனால் மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் அளித்த வாக்குகளால் ஜனாதிபதியான மைத்திரி தமிழர்கள் தன்னை ஏற்று கொண்டு விட்டார்கள் என்ற ஒரு மாயையை சர்வதேசத்திற்கு உருவாக்கி வருகிறார். அத்துடன் இந்த மாதம் நடைபெற இருந்த ஐ நா விசாரணை அறிக்கை வராது பிற்போடப்படடதற்கும் இவரே காரணம் ஆகும். மகிந்தவினால் தடுக்க முடியாத சர்வதேச விசாரணையை மைத்திரியினால் பதவிக்கு வந்த உடன் தடுக்க முடிந்துள்ளது.

அண்மையில் யாழ் விஜயம் செய்த மைத்திரி “உங்கள் காணிகள் மட்டும் அல்ல அலரி மாளிகைக்காகவும் பல காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பெறப்பட்டுள்ளன” என்று கருத்து கூறி இருக்கிறார். இராணுவம் அகற்றப்பட மாட்டாது என்பதில் உறுதியாகவுள்ளார். தமிழரோடு சமரசம் என்ற நாடகத்தை உலகுக்கு காட்டி தமிழ் மக்கள் மீதுள்ள உலக அனுதாபத்தை முழுமையாக மாற்றியமைத்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடர வழி வகுக்கின்றார்.

எனவே இந்த இனப்படுகொலைப் பங்காளியை நாம் எதிர்க்க முடிவு செய்தோம். சர்வதேசமே எதிர்பார்க்காத பாரிய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய வரலாற்று கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

நீங்கள் ஒவ்வொருவரும் பங்கு பற்றி எமது மக்களுக்காக குரல் கொடுத்த அத்தனை போராட்டங்களும் செயல்பாடுகளும்தான் ஐ நா விசாரணையில் இன்று வரை இலங்கை இருப்பதற்கான காரணம்.

பின்னடைவுகள் வெற்றிகளாக மாற்றப்பட்ட வரலாறு எம் இனத்திற்குச் சொந்தமானது.

தமிழினம் வேண்டுவது என்ன என்பதனை நாம் தெளிவாக சொல்ல வேண்டிய தேவை இன்று வந்துள்ளது. தாயகத்தில் எம் மக்கள் தமது வரலாற்றுக் கடமையை சரியாகச் செய்கின்றார்கள்.

அரசியல் மாற்றங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல்கள் வந்து போகும், ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும், நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை நாம் ஓயப் போவதில்லை என்று அனைவருக்கும்தெரிய வேண்டும்.

தொடரும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்து! நடந்த இன அழிப்பை தாமதமின்றி விசாரணை செய்! அதனை தடுத்து நிறுத்தும் வேடதாரிகளை அம்பலப்படுதது! என்பதை மீண்டும் சர்வதேசத்தின் காதுகளில் ஓங்கி ஒழிக்க செய்திடுவோம்.