செய்திகள்

மைத்திரியின் வெற்றிக்கு தமிழர்களே காரணம் ஜே.வி.பி. ஒருபோதும் உரிமை கோராது: அநுரகுமார

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு நேரடியாகப் பங்காற்றியபோதும் அதற்கு உரிமை கொண்டாடப்போவதில்லையென ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே வெற்றிக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் தாம் பங்கெடுப்பது குறித்துத் தீர்மானிக்கவில்லையெனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவு வெளியாகியதையடுத்து ஜே.வி.பி.யின் பெலவத்தையிலுள்ள தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் தலைவர் அநுர திஸநாயக்க கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; நடைபெற்று முடிந்த தேர்தல் என்றுமில்லாதவகையில் வரையறைகளை மீறிய தேர்தலாக இடம்பெற்றுள்ளது. எனினும் மக்கள் மகிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாத்து முன்கொண்டு செல்ல மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தியதைக் காணமுடிகின்றது.

தேர்தலில் பலவிதமான கட்டுக்கதைகள், தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடு, பொய்யான தகவல்கள் செய்திகளாக வெளிவந்தபோதும் மக்கள் இதனை நிராகரித்து மாற்றத்துக்காக உயர்ந்தளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அதுபோல் வன்முறைகளுக்கு முகம்கொடுத்தும், சர்வாதிகார பிரசாரத்துக்கு அடிபணியாது மக்கள் வாக்களித்துள்ளதைக் காணமுடிகின்றது. குறிப்பாக வரலாற்றில் என்றுமில்லாதளவில் பெருந்தொகைப் பணம் தேர்தலுக்காக செலவிடப்பட்டபோதும் மக்கள் தமது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்பதை வாக்கின்மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தைக் கொண்டுவர ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு எமது நன்றிகள்.

தேர்தலில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஜனநாயகத்தையும் இன ஐக்கியத்தையும் பாதுகாக்க மக்கள் வாக்களித்துள்ள நிலையில் ஜே.வி.பி. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தேர்தலின் பின் செயற்படும்.

அதாவது 1978 இல் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஆரம்பமுதலே ஜே.வி.பி. எதிர்த்து வருகின்றது. ஜனநாயகத்தைப் பாதிப்புறச் செய்யும் இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். அத்துடன் 18ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 17 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இதன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும் தகவல் அறியும் சுதந்திரம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை சட்டமாக்குவதற்கு ஜே.வி.பி. பங்காற்றும். மக்களின் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதிலும் நாம் உறுதியாகவுள்ளோம்.

ஒட்டுமொத்தத்தில் நாட்டில் ஜனநாயகத்தை, நல்லாட்சியை ஏற்படுத்த ஜே.வி.பி. தேர்தலின் பின்செயற்படும். இதேவேளை தேர்தல் வெற்றிக்காக ஜே.வி.பி. நேரடியாகப் பங்குகொண்டது. எனினும் வெற்றிக்கு உரிமை கொண்டாடாது. அதேநேரம் மறைமுகமாக ஆதரவை வழங்குவோம். எனினும் தேசிய அரசாங்கத்தில் பங்கு கொள்வதற்குத் தீர்மானிக்கவில்லை. இதேவேளை பொது வேட்பாளரின் வெற்றிக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.