செய்திகள்

மோடி அனுராதபுரம் செல்ல விரும்புவதன் நோக்கம் என்ன?

இலங்கைக்கான தனது அடுத்த மாத விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் மேலும் பௌத்தத்துடனான தனது தொடர்புகளை அது வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12 அல்லது 13 ம் திகதி கொழும்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ள மோடி யாழ்ப்பாணத்திற்கு 14 ம் திகதி விஜயம் மேற்கொள்வார்,இந்தியா அனல் மின்நிலையமொன்றை அமைத்துவரும் திருகோணமலைக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா மோடி அனுராபுரத்திற்கு விஜயம் மேற்கொள்வதையும அவரது நிகழ்ச்சிகளில் இணைக்க முயன்றுவருகின்றது.

4ம் நூற்றாண்டு முதல் 11 வரை இலங்கையின் தலைநகராக விளங்கிய இந்த புராதன நகர்,பல வருடங்களாக தேரவாத பௌத்த்தின் மையப்பகுதியாகவும் காணப்பட்டது. அசோக மன்னனின் மகன் மகேந்திர பௌத்தம் குறித்து இரு உரைகளை நிகழ்த்திய நகரமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பௌத்த பாரம்பரியம் காணப்படுவதை உலகிற்கு உணர்த்தும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் படியே அனுராபுரத்திற்கான இந்த விஜயம் இடம்பெறுவதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இது மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும்,பௌத்த பாரம்பரியத்தினை கொண்டிருக்கும் தென்னாசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் மென்சக்தியை ஊக்குவிக்க உதவும் என மேலும் தெரிவித்துள்ள அந்த அதிகாரி,இலங்கை மற்றும் தென்கிழக்கு தென்னாசியாவிலிருந்து பௌத்த சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கு இந்தியா முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.