செய்திகள்

யானை தாக்குதலை தடுக்க நடிவடிக்கை எடுக்க கோரி போரைதீவுப்பற்று மக்கள் ஆர்ப்பாட்டம்

யானை ஒன்று இறந்தால் அதற்கு பெரும் மதிப்பளிக்கும் அரசாங்கம் யானையினால் மனிதன் இறக்கும்போது அவற்றினை கருத்தில் கொள்வதில்லையென மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தக்கோரி பிரதேச மக்கள் இன்று காலை வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் பிரதான வாயில்கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல காலமாக யானையின் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவற்றினை கட்டுப்படுத்த இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக்கிராமங்கள் மற்றும் யானைகளினால் பாதிக்கப்படும் கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு வருகைதந்த பிரதேச செயலாளரை அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்காத பொதுமக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வினை வழங்கிவிட்டுச்செல்லுமாறும் கோரிக்கை விடுத்தனர். போரதீவுப்பற்று பிரதேசத்தில் யானைப்பாதுகாப்புக்கு என வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் அவற்றினால் இதுவரையில் தமது யானை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர். தமது பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்த மட்;டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாஇபா.அரியநேத்திரன்இகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜாஇஞா.கிருஸ்பிள்ளை ஆகியோர் வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன்போது சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.

இதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்இ பொதுமக்கள்இ பிரதேச செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையில் யானைகளை மக்கள் பகுதிகளில் இருந்து அகற்றுவதற்காக உறுதிமொழியை எழுத்துமூலம் தரவேண்டும் என பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது.

போரதீவுப்பற்றில் அனேகமான பகுதிகளில் மக்கள் பீதியுடனேயே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே காணப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர். யுத்த காலத்துக்கு பின்னர் இந்த யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துக்காணப்படுவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் தாங்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும் எதுவித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லையெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, யானைகளின் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கூட்டங்களை நடாத்தி பல்வேறு தீர்வுகள் எடுக்கப்பட்ட நிலையிலும் எதுவித பிரயோசனமும் இல்லையென தெரிவித்தார்.
அமைச்சு மட்டத்திலும் மாவட்ட செயலக மட்டத்திலும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.ஆனால் அதுதொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இனியும் இதனை அனுமதிக்கமுடியாது என தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகளின் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் வழங்கிய எழுத்துமூலமான உறுதியையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
நேற்று வியாழக்கிழமை காலை போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வக்கியல்ல பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_0110

IMG_0016

IMG_0024

IMG_0046

IMG_0086

IMG_0059

IMG_0022