செய்திகள்

யார் கையில் எத்தனை படங்கள்… டாப் ஹீரோக்களின் அடுத்தடுத்த ப்ளான்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி , கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ் ,விஷால்,  சிவகார்த்திகேயன் , விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி இவர்கள் என்னென்ன படங்களில் நடித்து வருகிறார்கள் , அடுத்தடுத்து என்னென்ன படங்கள் கையில் உள்ளன இதோ ஒரு சிறப்பு சர்வே.

ரஜினி : ‘லிங்கா’ பிரச்சனைகள் முடிந்து தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தானே கேட்டுகொள்ள 150 கோடி பட்ஜெட்டில் மிகபிரம்மாண்ட படமாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்போதைக்கு இதுதான் ப்ளான்.

கமல்: ‘உத்தம வில்லன்’ வெளியாக இருக்கிறது. ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2’ படங்கள் பெரும்பாலும் முடிந்து இவ்வருடமே வெளியாக உள்ளன. இது மட்டுமின்றி ஆக்‌ஷன் ,த்ரில்லர் கதைக்களத்தில் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதில் உலக நாயகனுக்கு ஜோடியாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

அஜித்: ‘என்னை அறிந்தால்’ தெலுங்கிலும் விரைவில் ரிலீஸ். இப்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக ஆக்‌ஷன் கதையில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் படத்தின் பூஜைகள் போடப்பட்டு படம் துவங்கியது.இப்போதைக்கு செல்ல மகனுடன் நேரம் செலவிடல், விரைவில் சிவா படத்தின் படப்பிடிப்பில் இணைதல் அவ்வளவுதான் தல ப்ளான்.

விஜய்: சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடக்கிறது. இதற்கிடையில் அட்லீ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் துவங்கிவிட்டன. ‘புலி’ பாய்ச்சலுக்கு பிறகு அடுத்து அட்லீ படத்தில் சமந்தா, எமி ஜாக்சனுடன் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்கள் சிலரிடம் கதைக் கேட்டுள்ளாராம் விஜய். அட்லீ படம் பாதி படப்பிடிப்பின் போது யார் அடுத்த இயக்கம் என அறிவிக்க படும் என தளபதி, 2016 அட்டவணை கூட ரெடியாக வைத்திருக்கிறார்.

விக்ரம்: விஜய் மில்டன் இயக்கத்தில் சமந்தாவுடன் ‘10 எண்றதுக்குள்ள’ படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘மர்ம மனிதன்’, மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ என இரு படங்களில் கால்ஷீட்டுகளை பிரித்துக் கொடுத்து நடிக்க இருக்கிறார். இதனையடுத்து மீண்டும் ஷங்கர் படமாம் . ரஜினி நடிக்க இருக்கும் 150 கோடி பட்ஜெட் படத்தில் விக்ரமும் இன்னொரு ஹீரோவாம். மறுபடியும் முதல்ல இருந்தா!