செய்திகள்

யாழில் கழிவு ஒயில் கலந்துள்ள நீரை 5 வருடங்களின் பின்னரே பயன்படுத்த முடியும்

யாழ்.சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளிலுள்ள கிணற்று நீரைச் சுமார் 5 வருடங்களின் பின்னரே பயன்படுத்தலாம் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இ.தேவநேசன் தெரிவித்துள்ளார்.அதுவரை குறித்த கிணறுகளிலிருந்து பெறப்படும் நீர் மாதிரிகளைத் தொடர்ச்சியான ஆய்வுக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல் கடிதமொன்றை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.இவ்வாறு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளிலுள்ள கிணறுகளில் ஒயில் கலந்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.இதனைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட காலம் வரைக்கும் எமது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து ஒரே கிணற்றிலிருந்து குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு தடவை நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட வேண்டும்.

குறிப்பாக உடுவிலில் 15 நீர் மாதிரிகள்,தெல்லிப்பழையில் 10 நீர் மாதிரிகள்,சண்டிலிப்பாய்,சங்கானை,கோப்பாய் போன்ற பகுதிகளில் தலா 5 நீர் மாதிரிகளாவது பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

இவ்வாய்வுகளுக்கான செலவீனங்களை அந்தந்தப் பிரதேச சபைகளுடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ் ஆய்வுகள் குறைந்தது மூன்று வருடங்கள் தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அறிவுறுத்தல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் நிருபர்-