செய்திகள்

யாழில் கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

யாழ்.வட்டுக்கோட்டையில் கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை(16.5.2015) வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை முதலி கோயிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி(வயது-34)என்ற பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கடந்த 11 ஆம் திகதி பொன்னாலை வீதி கொம்மாந்துறை வெளியில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த பெண்ணின் கொலை தொடர்பில் விசாரணைகளை நடாத்திய பொலிஸார் சந்தேகநபர்கள் கொலை இடம்பெற்ற இடத்தில் விட்டுச் சென்ற தடயப் பொருட்களின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தினர்.

தடயங்களின் அடிப்படையில் மரணமான பெண்ணின் சகோதரியின் கணவரையும், அளவெட்டியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரையும் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்திய பொலிஸார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் மல்லாகம் நீதவானின் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதன் போது சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்.நகர் நிருபர்-