செய்திகள்

யாழில் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு கிணறுகளில் நீர் மாசு நிருபணம்

யாழ்.மாவட்டத்திலுள்ள நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள 30 கிணற்று நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவற்றில் 27 கிணறுகளில் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் எண்ணெய் மற்றும் கிறீஸ் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம் மாதம் ஏப்ரல் மாதம்-10 ஆம் திகதியிடப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் பிரதேசத்தில் உடுவில்,கோப்பாய்,தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள 30 கிணறுகளிலிருந்து கிணற்று நீர் மாதிரிகள் பெறப்பட்டு இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

30 கிணற்று நீர் மாதிரிகளில் வெறும் 3 நீர் மாதிரிகளில் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு மேல் எண்ணெய் மற்றும் கிறிஸ் கொள்ளளவு காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப் பரிசோதனைகள் அனைத்தும் இலங்கையிலேயெ நம்பகத் தன்மையானதும், சட்ட ரீதியான அங்கீகாரம் உள்ளதுமான அமசாங்க பகுப்பாய்வு நிறுவனத்தில் நடத்தப்பட்டுள்ளன.

அது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியினால் சிபார்சு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் பகுதியில் ஆய்வு நடத்தி அப்பகுதியில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் மாசு இல்லை எனத் தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.