செய்திகள்

யாழில் பெண்தலைமைத்துவ மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது

யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிக்குட்பட்ட 10,760 பெணஒ;தலைமைத்துவ மற்றும் வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 20 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி.வத்சலா அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பி.எஸ்.டி.ஜி திட்டத்தினூடாக உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் முற்பகல் 11 மணியளவில் சுன்னாகத்தில் அமைந்துள்ள உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தில் இடம்பெற்ற போது நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போசாக்கு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோழிக்குஞ்சுகள் மாகாணமட்ட நிதித்திட்டமிடலூடாக வருடாந்தம் வழங்கப்பட்டு வருகிறது. பின்தங்கிய நிலையிலுள்ள சிறு பிள்ளைகள் அதிகளவு கொண்ட குடும்பங்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகிறது.அதிலே 10 வரையான குஞ்சுகள் சேவல் குஞ்சுகள். ஏனைய 10 குஞ்சுகளையும் உள்ளூர்த் தீவணத்தை இட்டு வளர்க்கும் போது ஒரு முட்டைக்குரிய செலவு 5ரூபாவாகத் தானிருக்கும். ஆனால்,வெளியில் முட்டையொன்று வாங்குவதற்கான செலவு தற்போது 15 ரூபாவாகக் காணப்படுகிறது.

ஐ.நா அறிக்கையின் படி தற்போது உலகளாவிய ரீதியில் சிறுபிள்ளைகளில் பலரும் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, சிறுவயதில் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதனூடாக அவர்களின் மூளை விருத்தியடையும். பிள்ளைகள் கல்வியில் உயர் புள்ளிகளைப் பெறுவதற்கும், உடல், உள ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து அவசியமானது.

புறொயிலர் கோழியை இறைச்சிக்காகப் பயன்படுத்த முடியாத நிலையில் அதில் மருந்துத் தன்மை காணப்படுகிறது.ஆகவே அதனை நாம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நாங்கள் இவ்வாறு கோழிக்குஞ்சுகளை மானிய அடிப்படையில் வழங்குவது கோழி வளர்ப்பைக் கிராம மட்டத்தில் ஊக்குவிக்கும் செயற்பாடாகும்.1 மாதங்கள் நன்கு கண்காணிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இக் கோழிக் குஞ்சுகளுக்கு நீங்கள் 130 ரூபா அளித்தால் அரசாங்கம் எஞ்சிய 130 ரூபாவுக்கான செலவினை வழங்குகிறது.இந்தக் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதனூடாக பயனாளிகளின் பொருளாதாரம் மேம்பாடடைய வேண்டுமென்பதே எமது நோக்கம்.

எங்களுடைய சைவசமயத்திலே விரதங்கள், ஆலயத் திருவிழாக்கள் என்பன காணப்படுவதால் கோழி வளர்ப்பாளர்கள் முன்னர் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தாலும் கூடத் தற்போது உணவகங்களுக்கும் விற்பனை செய்யக் கூடியதாகவுள்ளது எனவும் கூறினார்.