செய்திகள்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசம் முற்றாக முடங்கியது

யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படவுள்ளது.இந்நிலையில், கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வெறிச்சோடிக் காணப்படுவதுடன் இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை குறித்த பகுதியில் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி இன்று முதல் ஆரம்பமாமாகவுள்ளது.(15)