செய்திகள்

யாழ்.அரச அதிபருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் சுட்டிக் காட்டிய யாழ். வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகம் (படங்கள்)

எங்கள் பாடசாலைப் பகுதிகளிலும் அயல் பிரதேசங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களுக்கு உகந்த இடங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரி சமூகத்தால் யாழ்.அரச அதிபருக்கு நேற்று வெள்ளிக்கிழமை(29.5.2015) கையளிக்கப்பட்ட மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கெதிராகவும்,புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரியும் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகம் நேற்று விழிப்புணர்வு நடைபவனியும்,விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தியிருந்தது.

இதன் போது யாழ்.அரச அதிபருக்கான மகஜர் அவரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்டப் பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி.உதயணி நவரட்ணத்திடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எமது கல்லூரிச் சமூகம் இன்றைய நாளின் விழிப்புணர்வு நடைபாதையின் இறுதி நிகழ்வாகத் தங்களிடம் இந்த மகஜர் கையளிக்கப்படுகின்றது.

எமது பாடசாலையானது 2011 ஆம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சூழலில் தமது சொந்த இடத்தில் தற்போது இயங்கி வருகின்றது.

எமது பாடசாலைக்கு வடக்குப் பக்கமாக இராணுவக் குடியிருப்பும், தெற்காகப் புன்னாலைக்கட்டுவன் கிராமமும், மேற்குப் பக்கமாகக் குரும்பசிட்டியையும், வயாவிளானையும் தன்னகத்தே கொண்டது.

இம் மாணவர்கள் யாவரும் பின்வரும் பிரதேசங்களிலிருந்து கல்வி கற்பதற்காக வருகின்றனர்.

வயாவிளான், குரும்பசிட்டி, ஏழாலை, குப்பிளான், குட்டியப்புலம், சுதந்திரபுரம், கோணாவளை, ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், ஈவினை, நீர்வேலி,கோண்டாவில் போன்ற பகுதிகளில் இருந்தும் 14 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக 3 பிரதேச செயலர் பிரிவுகளை மேலோட்டமாக உள்ளடக்கிக் கற்றல் செயற்பாட்டிற்காக வருகை தருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் அநேகமானவை கடந்த 3 வருடங்களுக்குள் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து மக்கள் பாவனைக்காக விடப்பட்டவையாகும்.

அநேகமான பிள்ளைகள் மிகவும் வறிய சூழலில் இருந்து கற்றல் செயற்பாட்டிற்காக இங்கே வருகின்றனர். இவர்களுடைய பாடசாலை வருகையானது நடந்து வருதல், சைக்கிள் உறவினர் வாகனங்கள், பருவகாலச் சீட்டு, தனியார் பேருந்து ஆகிய வழிமுறைகளில் அமைகிறது.

இதில் சைக்கிள் நடந்து வருகின்ற பிள்ளைகள் பால் அதிககவனம் எடுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் அநேகமானவை ஆள் நடமாட்டம் குறைந்த பிரதேசம், கைவிடப்பட்ட வெற்றுப் பற்றைக் காடுகள், மக்கள் பாவனையற்ற பாழடைந்த வீடுகள், இராணுவக் காவலரண்களைக் கொண்டவையாகவும் காணப்படுகிறது.

மேற்படி பௌதீகக் காரணிகள் பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களுக்கு உகந்த இடமாக எம்மாலும், ஆங்காங்கு குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டும் எங்கள் பாடசாலைப் பகுதிகளிலும் அயல் பிரதேசங்களிலும் நடைபெறாத வண்ணம் பெண்கள், மாணவியருக்குரிய காப்புரிமையைத் தங்களிடம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

அந்த வகையில் பின்வரும் விடயங்கள் தங்களால் பரிசீலிக்கப்படுமாயின் ஓரளவேனும் பெண்கள், பாடசாலைப் பிள்ளைகளை நாம் பாதுகாக்கக் கூடியதாக இருக்குமென நாம் எண்ணுகிறோம்.

ஓவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலும் மாதர் பெண்கள் விழிப்புணர்வு மாதம் தோறும் நடைபெற வேண்டும். காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரைக்கும் மதியம் 2 மணி தொடக்கம் 3 மணி வரையும் மேற்குறிப்பிட்ட பிரதேசங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், பயனாளிகளுக்கூடாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

பாழடைந்த கட்டடடங்களின் உரிமையாளர்கள் அதனைப் பேணிப் பராமாரிக்காத பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாடசாலை நேரங்களில் அதிகமான காவல்துறையினர் மேற்படி பிரதேசங்களைத் தமது கண்ணோட்டத்திற்குள் கருத்திற் கொள்ளுதல். மேற்படி எமது பாடசாலைக்குப் பயன்பாட்டிற்கென ஒரு பேருந்து நன்கொடையாகக் கையளிக்கும் பட்சத்தில் இலவசமாக ஓர் பாதுகாப்பான இடம் வரைக்கும் மாணவர்களை முன்னகர்த்த முடியும்.

காலையிலும் மதியத்திலும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் 2 மேலதிகமாக விடப்பட வேண்டும். ஆண் மாணவர்களுக்குத் தனியான பேருந்தும், பெண் மாணவர்களுக்குத் தனியான பேருந்தும் (இது பிரத்தியேக பாடசாலை சேவையாக) ஒழுங்கமைக்க வேண்டும்.

தனியார் பேருந்துகளில் கடமையாற்றும் நடத்துநர்கள், பெண்கள், மாணவியரின் அங்கங்களில் கைகள் வைத்துத் தள்ளி ஏற்றுவதும் இறக்குவதும் முற்றாகத் தடை செய்ய ஆவண செய்ய வேண்டும்.

வெளியார் மேற்படி கிராமங்களிலும் வீதிகளிலும் வழமைக்கு மாறாக வாகனங்களோ, நபர்களோ பாடசாலை நேரங்களுக்கு முன்னதாகவோ, பாடசாலை விடும் நேரங்களிலோ நடமாடித் திரிவதாகக் காணப்பட்டால் இதனைக் குறித்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கருத்திலெடுக்க வேண்டும்.

பாடசாலைச் சூழலை அண்மித்துள்ள சட்ட அனுமதி பெற்றதும், அனுமதி பெறாததுமான மதுபானசாலைகள் மதியம் 1 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை மூடப்பட்டிருத்தல் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(கள்ளுத் தவறணை உட்பட),மதுபானம்அருந்திய நிலையில் வீதிகளிலும்,ஒழுங்கைகளிலும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள்,குழுமங்கள் உரிய முறையில் கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு சில விடயங்களில் மேலான கவனத்தைச் செலுத்துகின்ற போது பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பது மாத்திரமன்றி மாணவ மாணவியருக்கான நம்பிக்கையான கல்வியினைப் புகட்டக் கூடிய சூழலை உருவாக்கலாம் என்று கருதுகின்றோம் என அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகர் நிரூபர்-

IMG_4100

IMG_4106

IMG_4107

IMG_4138

IMG_4140

IMG_4166

IMG_4167

IMG_4169