செய்திகள்

யாழ்.உடுவில் நடைபெற்ற கால்நடை வைத்திய முகாம் (படங்கள்)

யாழ்.உடுவில் கால்நடை வைத்திய அலுவலகத்தால் ஏழாலை வடக்குப் பிரதேசத்துக்கான கால்நடை வைத்திய முகாம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஏழாலை மத்திய சனசமூக நிலையம் மற்றும் காளிகோயில் பகுதிகளில் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.சி.விமலகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த வைத்திய முகாம் காலை 09.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றன.இதன் போது உடுவில் கால்நடை வைத்திய அதிகாரியுடன் தடுப்பூசி ஏற்றுனரும் பிரத்தியேகச் சினைப்படுத்துனருமான டாக்டர் ரி.சர்மிலராஜ்,கால்நடை வைத்திய அலுவலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புக் கூட்டுறவுச் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து கால்நடைகளுக்கான பல்வேறு வைத்திய சேவைகளை வழங்கினர்.

குறித்த வைத்திய முகாமில் கால்நடைகளுக்கான சகல வகைத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றல்,கால்நடைகளுக்கான மருத்துவம்,மாடுகளுக்குக் காது அடையாளமிடல்,மாட்டுப் பண்ணைகளைப் பதிவு செய்தல்,கால்நடை விரிவாக்கல் மற்றும் புல்வளர்ப்பு சம்பந்தமான ஆலோசனைகள் போன்ற வைத்திய சேவைகள் மேற்கொள்ளப்பட்டதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி ரி.சர்மிலராஜ் தெரிவித்தார்.

இந்த வைத்திய முகாம் கால்நடை வளர்ப்பில் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாகவும்,இந்த முகாமில் பல கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றதாகவும் தெரிவித்த அவர் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான வைத்திய முகாம்கள் ஏற்பாடு செய்து நடாத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை,கால்நடை வைத்திய சேவைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற விரும்பும் கால்நடை வளர்ப்பாளர்கள் சுன்னாகம் புத்தூர் வீதி கொத்தியாலடிச் சந்தியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் திங்கள் முதல் சனிவரையான நாட்களில் தொடர்பு கொள்ளுமாறும்,நண்பகல் 12 மணிக்கு முன்னர் தொடர்பு கொள்ளும் போது சேவைகளைப் பெற்றுக் கொள்வது இலகுவாகவிருக்குமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 IMG_4474 IMG_4476 IMG_4478 IMG_4479 IMG_4480 IMG_4483 IMG_4485 IMG_4486 IMG_4490 IMG_4491 IMG_4494