செய்திகள்

யாழ். குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய தேர்த் திருவிழா வெகு விமரிசை (படங்கள்)

திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட ஈழத் திருநாட்டின் சிரசாகத் திகழும் வடபாலுள்ள யாழ்ப்பாணத்தில் ஆலயங்கள் நிறையப் பெற்ற குப்பிளான் வீரமனைப் பதியில் எழுந்தருளி அருளாட்சி புரியும் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திரத் தேர் பவனி இன்று சனிக்கிழமை (02.5.2015) நூற்றுக் கணக்கான பக்தர்கள் புடைசூழச் சிறப்பாக இடம்பெற்றது.

காலை 09 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து சுமார் 10.45 மணியளவில் அம்பாள் சித்திரத் தேரில் ஆரோகணித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று 11.15 மணியளவில் தேர்ப் பவனி ஆரம்பமானது.

தேர்ப் பவனியின் பின்னால் பஜனை கானம் இசைக்க அதனைத் தொடர்ந்து இளைஞர்களும், சிறுவர்களும் அங்கப் பிரதிஷ்டை செய்ய பெண்கள் அடி அழித்து கற்பூரச் சட்டி ஏந்தி தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

தேர்ப் பவனி பகல் 12.30 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை மேற்கொண்டனர்.

பிற்பகல் 2 மணியளவில் தேரில் சுவாமிக்குப் பச்சை சாத்தப்பட்டு அம்பாள் அவரோகண நிகழ்வு நடைபெற்றது. பல அடியவர்கள் தூக்குக் காவடி,பறவைக் காவடி,பால் காவடி என்பன எடுத்துத் தமது நேர்த்திகளை நிறைவேற்றினார்கள்.

ஒரு அடியவர் வாள் மீது அமர்ந்தவாறு தூக்குக் காவடி எடுத்து நேர்த்தியை நிறைவேற்றியதைக் கண்ட பக்தர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள். தேர் பவனியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது அடியவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலயச் சூழலில் இரு தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன் ஆலயத்தின் அபிராமி மணி மண்டபத்தில் தேர்த்திருவிழா உபயகாரர்களால் அடியவர்களுக்கு அமுதளிக்கும் அறப் பணியும் இடம்பெற்றது.

செய்தி மற்றும் படங்கள்: ரவி-

IMG_2745

IMG_2749

IMG_2751

IMG_2753

IMG_2771

IMG_2779

IMG_2787

IMG_2792

IMG_2802

IMG_2821

IMG_2823

IMG_2830

IMG_2831

IMG_2840

IMG_2915

IMG_2919