செய்திகள்

யாழ்-சென்னை விமான சேவை நாளை மறுதினம் முதல் ஆரம்பம்

யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இந்த வைபவத்தில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூண ரணத்துங்க இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன் ஜித் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.அன்றைய தினம் எயார் இந்திய விமான துணை நிறவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் ஏ.பி. ஆர். 72600 ரகவிமானம் முதல் முறையாக தரை இறங்கியது. இந்த விமானத்தில் ஏயார் இந்திய நிறுவன தலைவர் அஷ்வான் ரொஹானி நிறைவேற்றுப்பணிப்பாளர் , சீ.எஸ்.சுப்பையா உட்பட 30 பேர் இந்த விமானத்தில் பலாலிக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோக பூர்வ விமான சேவை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.சென்னையிலிருந்து முதலாவது விமானம் நாளை மறுதினம் நண்பகல் 12 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி தெரிவித்தார்.முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள் திங்கள் , புதன் , வெள்ளி ஆகிய தினங்களில் நடத்தப்படும். பின்னர் படிப்படியாக நாளாந்த சேவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி மேலும் குறிப்பிட்டார்.(15)