செய்திகள்

யாழ். சைவ மறுமலர்ச்சி விழாவில் பாரதீய ஜனதாக் கட்சிச் செயலர்!

உலக சைவத் திருச்சபை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தவுள்ள சைவ சமய மறுமலர்ச்சி விழாவில் இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் சட்டத்தரணி எச்.ராஜா உட்பட பல பிரமுகர்கள் பங்குபற்ற இருக்கின்றனர்.
உலக சைவத் திருச்சபையின் சர்வதேச அமைப்பாளரும், கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தாவுமான கலாநிதி அடியார் விபுலானந்தா, உலக சைவத் திருச்சபையின் இலங்கை செயலாளர் நாயகம் சைவ சிரோன்மணி வ.விஜீதரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
யாழ். காரையம்பதி சற்பிரசங்க சைவமணி செல்வரத்தினம் சண்முகரத்தினம் தலைமையில்  நடைபெறும் இவ்விழாவில் உலக சைவத் திருச்சபையின் பாரதத் தலைவரும் இராமநாதபுரம் மன்னருமான என்.குமரன் சேதுபதி மகாராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார்.
உலக சைவத் திருச்சபையின் பாரத சைவத் துறைத் தலைவர் சரவண மாணிக்கவாசக சுவாமிகள், உலக சைவத் திருச்சபையின் பாரதத்துக்கான சமூகத்துறைத் தலைவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் செயலாளருமான எச். ராஜா, உலக சைவத் திருச்சபையின் பாரதத்துக்கான செயலாளர் நாயகமும் எண்கணித நிபுணருமான ஜே.என்.எஸ்.செல்வன், உலக சைவத் திருச்சபையின் தமிழ்நாட்டுக்கான செயலாளர் நாயகமும் தொழில் அதிபருமான என். ஜெயக்குமார் ஆகியோரும் இந்த மறுமலர்ச்சி விழாவில் பங்குபற்றுகின்றனர்.
24 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் யாழ்ப்பாணம், நல்லூர், நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இந்த விழா இடம்பெறும்.