செய்திகள்

யாழ்.நகரப் பகுதி நடைபாதைக் கடைகள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

யாழ்.நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகக் காணப்பட்ட நடைபாதைக் கடைகள் அகற்றும் நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பொலிஸாருடன் யாழ்.மாநகர சபையினரும் இந்த அதிரடி நடவடிக்கையிலீடுபட்டனர்.

அந்த வகையில் யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் பாதசாரிகளுக்கு இடையூறாகக் காணப்பட்ட நடைபாதைக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்.நகரப் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களின் முன்பாக வைக்கப்பட்டிருந்த காட்சிப்படுத்தல்களையும் அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.வியாபார நிலையங்களின் முன்பாகப் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட வாகனங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டன.

பொலிஸார் மற்றும்,மாநகர சபையினர் இணைந்து மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கையைப் பாராட்டியுள்ள பொதுமக்கள் குறித்த நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.