செய்திகள்

யாழ் நகரில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

யாழில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.நேற்று யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாட்டில் கலந்துகொண்டு மத்திய பேருந்து நிலைய சாரதி நடத்துனர்களுடன் உரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.எதிர்வரும் நாட்களில் பேருந்துகளில் ஆசன அளவிற்கு அமைவாக பயணிகளை ஏற்றாதோர், பேருந்துகளில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது.யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்துத் தரிப்பிடம், முச்சக்கரவண்டித் தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, முகக்கவசம் அணியாதவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)