செய்திகள்

யாழ்.நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் அச்சுறுத்தல்

யாழ். நீதிமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து சனக் கூட்டத்தைக் கூட்டிக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்ததாகச் சாதாரண குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 34 பேர் நேற்று 8 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நேற்றைய தினமே விடுவிக்கப்பட்ட 34 பேரில் பலரதும் வீடுகளுக்கும் தேடிச் சென்ற புலனாய்’வப் பிரிவுப் பொலிஸார் தம்மை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்தனர்.

சந்தேகநகர்கள் நேற்றைய தினம் யாழ்.நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டிருந்தார்.அத்துடன் மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் 12 மணிக்குமிடையில் கையெழுத்திட வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே விடுவிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேற்று திங்கட்கிழமை மாலை சென்ற புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் அவர்களது குடும்ப விபரங்கள்,நண்பார்களின் விபரங்கள் போன்ற விடயங்களைப் பதிவு செய்துள்ளனர்.அத்துடன் வன்முறையில் ஈடுபட்டது சரியா?பிழையா?எனவும் அச்சுறுத்தும் வகையில் தம்மிடம் சில கேள்விகளைக் கேட்டதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடு தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் மன உளைச்சலைத் தோற்றுவித்ததாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.
யாழ்.நகர் நிருபர்-