செய்திகள்

யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அதாவது வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இடம்பெற்று வருகின்றது.இதேவேளை உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன என யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறவுள்ளது.

எனினும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையின்படி, ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேருந்து சேவை இடம்பெறவுள்ளது. காலப்போக்கில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய சாத்தியக கூறுகள் காணப்படுகிறது.எனினும் பேருந்து சேவையினை பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என பேருந்து நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.(15)