செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றப்பட்டவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்வு

வலிகாமம் வடக்கு மற்றும் வலி.கிழக்கு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டுள்ள 1013 ஏக்கர்நிலப் பகுதியில் மீள்குடியமர 993 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் முதற்கட்டமாக எழுபது குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர்,மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,வடமாகாண செயலாளர் என்.பத்திநாதன்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்தக் கலந்துரையாடல் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்.நகர் நிருபர்-