செய்திகள்

”யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமை இன்னும் நீங்கவில்லை”

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமை இன்னும் நீங்கவில்லை என்று மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது நேற்றைய தினம் மாத்திரம் 83 தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது 1754 குடும்பங்களைச் சேர்ந்த 5613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4668 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 63 ஆக கொரோராண மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.பயணத்தடை தளர்த்தப்படும்போது அவசியமான தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்களை வெளியில் செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறியுள்ளார்.
-(3)