செய்திகள்

யாழ். மாவட்டத்தில் முடக்கல் நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி – மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்றது. இதேவேளையில் நாடு பூராகவும் இன்று நள்ளிரவு முதல் 17ஆம் திகதி அதிகாலை வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு மத்திய நிலையத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் முடக்கல் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே யாரும் பயணிக்க வேண்டியிருந்தால் வழமை போன்று ஊரடங்கு நேர நடைமுறை போன்று அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று தங்கள் அனுமதியைப் பெற்று பயணிக்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையோர் பயணிக்க அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் சுகாதார நடைமுறையையும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி தற்போது நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.அத்துடன், விவசாய, மீன்பிடி உற்பத்திப் பொருள் போக்குவரத்தில் ஈடுபடுவோர் குறித்த திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று உரியவாறு விண்ணப்பிக்குமிடத்து அதற்குரிய அனுமதிகளும் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.அத்துடன் முடக்கல் நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம் பெற அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.(15)