செய்திகள்

யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை -இராஜதந்திரிகளிடம் மைத்திரி

யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.;
நேற்று ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிற்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் தனது எதிர்கால திட்டங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் தனது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணவிரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேசவிவகாரங்களில் நெருங்கி பணியாற்றுவதன் மூலமாக இலங்கைக்கும் ஏனைய உலகநாடுகளுக்கும் இடையில் நட்புறவை மேலும் பலப்படுத்தலாம்,உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்தது போன்று இலங்கையும் சர்வதேச அளவில் அவர்களுக்கு உதவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது நல்லாட்சி,ஜனநாயகம், போன்றவை குறித்து இலங்கை மக்களுக்கு உறுதிவழங்கப்பட்டது. அரசியலமைப்பு மாற்றங்கள், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு,பாராளுமன்றத்தை பலப்படுத்துதல் குறித்தும் வாக்குறுதியளிக்கப்பட்டது.
ஆரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் ஓரு பகுதியாக இந்த திட்டங்களையும் முன்னெடுக்கும்,இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலமாக மக்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் உதவியுடன் அனைத்து கட்சி ஆட்சி இடம்பெற முடியும் என்பதை காண்பித்துள்ளேன்.
நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த வேளை முன்னைய அரசாங்கம் நிதி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அரசமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும்போது வெளிப்படைத்தன்மை அவசியம், அதனை கருத்தில் கொண்டே அரசாங்கம் தகவல் சுதந்திர சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
வடபகுதி மக்களின் மனதில் உள்ள அச்சங்களை அகற்றுவது முக்கியம். புதிய அரசாங்கம் சகல சமூகத்தினர் மத்தியிலும் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகின்றது.
வடகிழக்கில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் நிலங்களை மீள ஓப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை இடம்பெறும், என குறிப்பிட்டுள்ளார்.