செய்திகள்

ரயில் மோதி யாழ். இந்து மாணவன் படுகாயம்: தண்டவாளத்தில் மக்கள் போராட்டம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் யாழ். பிறவுண் வீதி, முதலாம் குறுக்கு வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்கமுயன்ற மாணவன் ஒருவரை மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தையடுத்து மக்கள் ரயில் பாதையை தடை செய்து நடத்திய போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்றம் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. யாழ்.இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனான, கோப்பாயைச் சேர்ந்த குகதாசன் குகப்பிரியன் (வயது 16) என்பவரே படுகாயமடைந்தார். படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மாணவனை மோதிய ரயில் அந்த இடத்தில் நிற்காமல் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ரயில் தண்டாவாளத்துக்குக் குறுக்கே மின்கம்பங்களைக் போட்டு மீண்டும் ரயில் அந்த வழியாகப் பயணம் செய்யமுடியாமல் தடுத்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மக்களுடன் கலந்துரையாடி, நாளை தொடக்கம் கடவையில் காவலர்கள் இருவர் கடமையில் இருப்பர் என்றும் உறுதியளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து, தடைகளை அகற்றப்பட்டது.