செய்திகள்

  -ரவூப் ஹக்கீம்- மைனஸ் 13-

–தமிழ்- முஸ்லிம் மக்களைப் பிரித்துக் கையாண்டதன் மூலம், கடந்த மூப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கள ஆட்சியாளர்கள் நன்மைகளைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிக் கொண்டே முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்திய துணிவை மறந்துவிட முடியாது. வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் உடன்பாடு இல்லை. எனினும் அது பற்றிப் பேசலாம் என்பதற்கான காரணங்களைப் பேராசிரியர் அமீர் அலி முன்வைக்கிறார்—

-அ.நிக்ஸன்-

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர வேண்டிய காலமிது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு யூலை  மாதம் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது எதிர்ப்பு வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் அஷ்ரப், முஸ்லிம்களுடன் உரையாடவில்லையெனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களிடம் திணிக்கப்பட்டதென்ற விமர்சனங்களையும் அன்று அஷ்ரப் ஏற்றிருந்தார். இருந்தாலும்; 1988 ஆம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருந்தது. தேர்தலில் அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணி போட்டியிடவில்லை. மாகாண சபையைக் கூட்டணி புறக்கணிப்புச் செய்தமையே அதற்குக் காரணம்.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் வாழும் முஸ்லிம்கள், எப்போதுமே இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் இணைந்து இணக்க அரசியலில் ஈடுபட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அமைச்சர் பொறுப்புக்களையும் அரச திணைக்களப் பதவிகளென இலங்கை அரச நிர்வாகக் கட்டமைப்புக்கு ஏற்ற அனைத்து அரசியல் நியமனப் பதவிகளிலும் தமிழ் மொழி பேசுவோர் என்ற காரணத்தால் முஸ்லிம்கள் அதனை அலங்கரித்து வருகின்றனர்.

ஆனால் இது ஒரு சலுகை அரசியல் என்று காத்தான்குடியைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.சீ.எஸ் அமீர் அலி ‘சிந்தனைச் சுவடு’ என்ற தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றின் ஓய்வு நிலைப் பேராசிரியரான அமீர் அலி, தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே முஸ்லிம்கள் தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமென்கிறார்.

தமிழ்- முஸ்லிம் தரப்புகள் ஒன்றுக்கொன்று தவறிழைத்திருக்கின்றன. ஆனால் அதுபற்றித் தொடராகப் போசிக் கொண்டிருக்காமல், 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்- முஸ்லிம் இணைந்த அரசியல் சூழலை உருவாக்க உரையாடுங்கள் எனவும் வலிறுத்துகிறார். இருதரப்பும் அதற்குரிய நம்பிக்கைகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோருகிறார்.

ஆனாலும் தமிழர்களோடு இணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் எதுவுமே இதுவரை கருத்து வெளியிடாத நிலையில், யாழ்ப்பாணச் சந்திப்பையடுத்துத் தமிழர்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய அவசியம் குறித்து ஹக்கீம் கூறியமை சிந்தனைக்குரியது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில் மாத்திரமே முஸ்லிம் கட்சிகளில் இருந்து அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. (நீதியமைச்சர் அலி சப்றி ஜனாதிபதியின் தனிப்பட்ட நட்பு- இவரை முஸ்லிம்களில் அதிகமானோர் தங்கள் பிரதிநிதியாக ஏற்கவில்லை)

சில முஸ்லிம் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தாலும்கூட, அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை. எனவே சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவான ஜனாதிபதி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் செயற்பட்டு வரும் பின்னணியிலும் ரவூப் ஹக்கீம் கூறிய கருத்தைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் பரிசீலிக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னரான ராஜபக்ச அரசாங்கத்தில் மாத்திரமல்ல அதற்கு முன்னரான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்கள், சிங்கள இனவாதக் கும்பல்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

அதுவும் ரவூப் ஹக்கீம். அதாவுல்லா, றிஷாட் பதியுதீன் போன்ற முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தபோதே முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அந்தத் தாக்குதல்கள் பற்றிய எந்தவொரு விசாரணைகளும் முழுமை பெற்றதுமில்லை. மாறாக முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆகவே சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம்களைத் தங்கள் அரசியல் தேவைக்கான கருவேற்பிலையாக மாத்திரமே பயன்படுத்துகின்றனர் என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணராதவர்கள் அல்ல. இணக்க அரசியல் செய்தாலும் இதுதான் நிலமை என்பதற்கு முஸ்லிம்கள் மாத்திரமல்ல. மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கும் அந்த அனுபவம் உண்டு. மனோ கணேசனின் கட்சிக்கும் இதேநிலைதான்.

இணக்க அரசியலினால் ஏற்பட்ட தங்கள் மனக் குமுறல்களை முஸ்லிம் கட்சிகளில், முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே அவ்வப்போது பகிரங்கப்படுத்தியது. தற்போது பெரும் அரச நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால் றிஷரட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணக்க அரசியலின் துன்பங்கள்; குறித்துப் புலம்ப ஆரம்பித்துள்ளது.

வடக்குக் கிழக்குக்கு வெளியேயுள்ள சிங்களக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களும் அவ்வப்போது அரசாங்கத்தை விமர்சித்தாலும், எந்தநேரத்திலும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு அவர்கள் தயாராகவுமிருக்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்ச திடீரென அழைப்பு விடுத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளும் இணைந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. றிஷரட் பதியூனின் கட்சியில் இருந்து ஏற்கனவே மூன்று உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு அமைச்சுப் பதவி இதுவரை இல்லை.

இதுதான் முஸ்லிம்களின் இணக்க அரசியல். இந்தவொரு நிலையில், ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களுடனான ஒற்றுமை பற்றிப் பேசியிருப்பது தற்காலிக உறவா அல்லது தமிழ்க் கட்சிகளோடு இணைவது போன்று காண்பித்து அரசாங்கத்துடன் பேரசும் பேசும் நகர்வா என்ற கேள்விகள் எழுந்தால் அதில் நியாயமுண்டு.

தனிக் கட்சி அமைப்பதற்கு முன்னரான காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்தே முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள். வெற்றி பெற்றதும் அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவார்களென ஹக்கீம் 2008இல் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகவே சாடியிருந்தார்.

2012ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 14 உறுப்பினர்களைப் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஏழு உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்து ஆட்சியை அமைத்தது.

ஆனால் பதினொரு உறுப்பினர்களைப் பெற்றிருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு ஹக்கீமிடம் அழைப்பு விடுத்திருந்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பல தடவைகள் ஹக்கீமிடம் பக்குவமாகக் கேட்டிருந்தார்.

முதலமைச்சர் பதவியைத் தருவதாகவும் உறுதியளித்தார். ஆனால் ஹக்கீம் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்திக் கிழக்கில் ஆட்சி அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டார்.

ஆகவே தமிழ்- முஸ்லிம் ஒற்றுமை வேண்டுமென்றால் 2012 ஆம் ஆண்டே கிழக்கில் இணைந்து ஆட்சியமைத்திருக்கலாம். ஆனால் ஹக்கீம் அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் அவர் அப்போது மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். இதனால் கிழக்கில் அரசாங்கத்துக்கு ஏற்புடைய ஆட்சியை அமைக்க ஹக்கீம் விரும்பியிருந்தார். இது அரசாங்கத்துடன் பேரம் பேசும் முஸ்லிம்களின் அரசியல்தான்.

ஆனால் இந்தப் பேரம் பேசும் அரசியல் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தராதெனச் சந்திரிகாவோடு முரண்பட்ட நிலையில் அஷ்ரப் சொல்லியிருந்தார். அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் வீரகேசரிப் பத்திரிகைக்காக இக் கட்டுரையாளருக்கு 2000 ஆம் ஆண்டு வழங்கியிருந்த நேர்காணலில் இதனைக் கூறியிருந்தார்.

கிழக்கில் தமிழ்- முஸ்லிம் ஒன்றினைந்த மாகாண சபை ஆட்சியை இழந்தமை குறித்து 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சம்பந்தன் விரிவாக விளக்கமளித்திருந்தார். ஹக்கீம் ஏன் தயங்கினாரெனக் கேள்வி எழுப்பிக் கவலைப்பட்டார்.

தமிழர்களைவிட அரசாங்கத்தையே முஸ்லிம்கள் நம்புவதாகவும் சம்பந்தன் குற்றம் சுமத்தினார். கிழக்கில் இணைந்து ஆட்சி அமைத்திருந்தால், படிப்படியாகத் தமிழ்- முஸ்லிம் உறவு வலுவடைந்து முரண்பாடுகளும் குறைவடைந்திருக்கும். சிங்கள ஆட்சியாளர்களை ஆட்டம் காணவும் செய்திருக்கலாமென்று கூறிய சம்பந்தன், அதற்கான காலம் கடந்து விடவில்லையெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆகவே சம்பந்தன் அன்று நம்பிக்கை வெளியிட்டது போன்று 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் தமிழ்- முஸ்லிம் உறவுக்கான காலம் கடந்து விடவில்லையெனலாம். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்துத் தமிழ்- முஸ்லிம் கூட்டுறவின் மூலம், வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை ரவூப் ஹக்கீமால் நிறுவ முடியும்.
வேண்டுமானால் 13ஐ நல்லிணக்கத்துக்கு முன்னோடியாகச் சிங்கள ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டுமென்ற உறுதியான நிபந்தணையை ஹக்கீம் முன்வைக்கலாம்.

ஏனெனில் சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து இணக்க அரசியலில் ஈடுபட்ட கசப்பான அனுபவம் முஸ்லிம்களுக்கே உண்டு. 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதானப் பேச்சிலும் ஹக்கீம் அரசாங்கத்துடன் இணைந்து பங்குபற்றியிருந்தார்.

ஆகவே 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் தமிழ்- முஸ்லிம் ஒற்றுமைக்காக மாத்திரமல்ல, வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மனம் திறந்த பேச்சுக்களையும் ஆரம்பிக்கும் ஏற்பாட்டாளராக ரவூப் ஹக்கீம் தன்னை மாற்றிக்கொள்ளலாம்.

13 முஸ்லிம்களுக்கும் தீர்வல்ல என்று அஷ்ரப் 1996 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் தீர்வுப் குறித்த விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது விளக்கியிருந்தார்.

ஆனால் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் உடன்பாடு இல்லையென்பது கண்கூடு. எனினும் அது பற்றிப் பேசலாம் என்பதற்கான காரணங்களைப் பேராசிரியர் அமீர் அலி முன்வைக்கிறார். அத்துடன் இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களிடம் இருக்கும் சந்தேகங்களைத் தமிழ்த் தரப்பு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பேராசிரியர் அமீர் அலி விதந்துரைக்கிக்கிறார். இது ஏற்புடையதே.

ஆகவே இரு மாகாணங்களையும் ஏன் இணைக்க வேண்டும் என்பது பற்றியும் அது தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்பது தொடர்பாகவும் முஸ்லிம்கள் பரிசீலிக்க வேண்டிய காலமிது. பேராசிரியர் அமீர் அலி எழுதிய சிந்தனைச் சிறகுகள் என்ற நூலை வாசிப்பதும் நன்று.

ஏனெனில் கிழக்கில் முஸ்லிம்களின் பாரம்பரியக் காணிகள். இஸ்லாமியப் பண்பாட்டு அடையாளங்கள் பௌத்த கலாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலேயே இஸ்லாமிய மரபுரிமை அடையாளங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசினால் சட்டரீதியாக அழிக்கப்படுகின்றன.

ஆகவே தமிழர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். குறிப்பாக இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லிம்களின் அதிகாரப் பங்கு என்ன என்ற சந்தேகங்களை இரு தரப்பும் நேர்மையாகப் பேசி முரண்பாட்டில் உடன்பாடு என்ற கோட்பாட்டை உருவாக்கினால், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம். பிரித்தாளும் தந்திரம் இனிமேல் பயன் தராதெனச் சிங்கள ஆட்சியாளர்களும் உணருவார்கள்.

புவிசார் அரசியல் போட்டியால். இலங்கையில் கால்பதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க, இந்திய அரசுகளுக்குப் படிப்பினையாகவும் இருக்கும். தமிழ்- முஸ்லிம் மக்களைப் பிரித்துக் கையாண்டதன் மூலம், கடந்த மூப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கள ஆட்சியாளர்கள் நன்மைகளைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிக் கொண்டே முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்திய துணிவை இலகுவில் மறந்துவிட முடியாது.

ஆகவே இதன் பின்னணியில், தமிழ்- முஸ்லிம் உறவுக்கான உறுதியான புதிய உரத்தை ரவூப் ஹக்கீம் முதலில் உருவாக்குவாராக இருந்தால், ஏனைய முஸ்லிம் கட்சிகள்கூட இணைவதற்கு வாய்ப்புகள் எழலாம். தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும்; இது பொருந்தும்.