செய்திகள்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் எங்கே? தகவல் இல்லை என்கிறது வெளிவிவகார அமைச்சு

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் இலங்கையின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, கிழக்கு யுக்ரெய்னில் உள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுதவிற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவரை அரசாங்கம் உனடியாக திருப்பி அழைத்த போதிலும், அவர் எங்குள்ளார் என்பதையிட்டு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரெய்னின் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் புகார் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

ஆனால், அவர் நாட்டுக்கு திரும்பியதாகத் தெரியவில்லை என்றும் வெளியுறவு அமைச்சினால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அஜித் பெரேரா கூறினார்.

“அவர் காணாமல்போயிருக்கிறார். இலங்கைக்கு வந்ததாகவும் தகவல் இல்லை. உலகில் எங்கிருக்கிறார் என்றும் கூறமுடியவில்லை. அவரைக் காணவில்லை” என்றார் அமைச்சர் அஜித் பெரேரா.

முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் என்று உதயங்க வீரதுங்கவை விபரித்த துணை வெளியுறவு அமைச்சர், அவர் தொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் கூறினார்.

அரசியல் காரணத்திற்காகவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உதயங்க வீரதுங்க 8 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டுத் தூதுவராக பணியாற்றியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

“சாதாரணமாக மூன்று ஆண்டுகள் தான் ஒருவர் ஒருநாட்டில் தூதுவராக இருப்பார். ஆனால், இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்திற்காக, இவருக்கு அதனையும் தாண்டிய வாய்ப்பு கிடைத்திருந்தது” என்றார் அஜித் பெரேரா.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது கருத்துக்களைப் பெற பிபிசி எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.