செய்திகள்

ராமர் கோயில் கட்டப்படும்: சாக்‌ஷி மகராஜ்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்துக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் தெரித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்துக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்.

பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், காங்கிரஸ் ஆட்சியிலா கட்டப்படும். இல்லை முலாயம் சிங், மாயாவதி ராமர் கோயிலை கட்டுவார்களா?

ராமர் கோயில் எங்கிருந்ததோ அங்கு மீண்டும் எழுப்பப்படும். பாபர் மசூதியுன் பெயரில் அங்கிருந்து ஒரு செங்கலைக் கூட யாரும் அசைக்க முடியாது.

பாஜக தனது ஓராண்டு ஆட்சியையே நிறைவு செய்துள்ளது. இன்னும் நான்கு ஆண்டு கால ஆட்சி மீதமுள்ளது. எனவே, இன்று இல்லை என்றால் நாளை நாளை இல்லையென்றால் அடுத்தநாள் பாஜக ஆட்சி காலத்திலேயே ராமர் கோயில் கட்டப்பட்டுவிடும்” என்றார்.

முன்னதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சில தினங்களுக்கு முன்னர், “மோடி அரசு ஆட்சி அமைத்ததற்குக் காரணம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய மட்டுமல்ல ராமர் கோயிலை எழுப்புதல் போன்ற கட்சியின் சில அடிப்படை கொள்கைகளை நிறைவேற்றவுமே” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், வி.ஹெச்.பி. தலைவர் கருத்தை உறுதி செய்வதுபோல் பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜும் அதே வாக்குறுதியை அளித்துள்ளார்.

கடந்த மாதமும் சாக்‌ஷி மகராஜ், “அயோத்தியில் ராமர் கோயில் ஒன்று இருந்தது. அக்கோயில் வரும் காலத்தில் திரும்பவும் கட்டப்படும். இது கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். 2019-ம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.