செய்திகள்

ராயுடுவின் அபார சதத்தில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது இந்தியா

அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை நிர்ணையித்த 275 ரன்களை இந்தியா ராயுடுவின் சதத்துடன் எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.

45-வது ஓவரின் 3-வது பந்தை செகுகே பிரசன்னா வீச அதனை ராயுடு மேலேறி வந்து சற்றே ஒதுங்கிக் கொண்டு கவரில் பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றி பெற்று மைக்ரோமேக்ஸ் கோப்பை ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகித்தது.

தனது முதல் ஒரு நாள் சதத்தை எடுத்த ராயுடு, 118 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 121 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வரை நின்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஷிகர் தவன் முதல் போட்டியின் சதத்தை தொடர்ந்து பிரமாதமான அதிரடி 79 ரன்களையும், விராட் கோலி விரைவு 49 ரன்களையும் எடுத்தனர்.

தொடக்கத்தில் மேத்யூஸ், கமகே இருவரும் சிக்கனமாக வீச 6வது ஓவரில் 17 ரன்களை மட்டுமே எட்டியிருந்தது இந்தியா. அப்போது 8 ரன்கள் எடுத்த ரஹானே, தம்மிக பிரசாத் பந்தை அடிக்க முயன்று எட்ஜ் செய்தார். ஆனால் பந்து சங்கக்காரா கிளவ்வில் பட்டு எகிறியது, அதனை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஜெயவர்தனே இடது புறமாக டைவ் அடித்து பிடித்தார். அபாரமான கேட்ச்.
1
நடுவரின் தவறான தீர்ப்பினால் பிழைத்த ஷிகர் தவன்:

ஆட்டத்தின் 8-வது ஓவர். ஷிகர் தவன் 10 ரன்களில் இருந்தார். கமகே வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பில் நல்ல அளவில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆனது, தவான் கால்களை நகர்த்தாமல் மட்டையை மட்டும் கொண்டு சென்றார். பந்து எட்ஜ் எடுத்து சங்கக்காராவிடம் கேட்ச் ஆனது. கடுமையாக முறையீடு செய்தனர். சங்கா மிகக் கடுமையாக முறையீடு செய்தார். ஆனால் நடுவர் மசியவில்லை. எட்ஜ் தெளிவாக ரிப்ளேயில் தெரிந்தது. அவுட் கொடுக்க மறுக்கப்பட்டது. இலங்கை அணியின் வெறுப்பு வெளிப்படையாக தெரிந்தது.

பிறகு ராயுடு கவர் திசையில் ஒரு பவுண்டரியுடன் தனது பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். 15 ஓவர்களில் இந்தியா 51/1 என்று மந்தமாகவே சென்று கொண்டிருந்தது. 17வது ஓவரில் ராயுடு, ரந்திவ் பந்தை மேலேறி வந்து லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடித்து தனது நோக்கத்தை தெளிவு படுத்தினார்.

பிறகு 22-வது ஓவரில் அதிர்ஷ்டக்கார தவன் அதிரடியைக் காட்டினார். திசர பெரேரா பந்தை இறங்கி வந்து லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். பிறகு அதே ஓவரில் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி, அடுத்த பந்தை நன்றாக பந்தை வரவிட்டு தேர்ட் மேன் திசையில் லேட் கட் செய்து மேலும் ஒரு பவுண்டரி அடித்தார்.22வது ஓவரில் இந்தியா 107/1. தவான் அரைசதம் கடந்து ஆடி வந்தார். ராயுடு தன் பங்கிற்கு வேகப்பந்து வீச்சாளர் பிரசாத்தை நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். 26வது ஓவரில் ராயுடு 59 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.

27வது ஓவரில் தவன் 80 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவன், ராயுடு இணைந்து 20 ஓவர்களில் 122 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ஆனால் அதன் பிறகு ராயுடுவும், கோலியும் இணைந்து ரன் விகிதத்தை விரைவு படுத்தினர். 16 ஓவர்களில் 116 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்க்க கோலி 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 49 ரன்களில் வெளியேறினார். ராயுடு முன்னதாக தனது முதல் ஒருநாள் சதம் கண்டார். அவர் சதம் எடுத்ததை கோலி சிக்சர் அடித்துக் கொண்டாடினார்.

கோலி ஆட்டமிழந்தவுடன் ரெய்னா ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து பிரசன்னா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். ஜடேஜா 1 நாட் அவுட். ஆட்ட நாயகன் ராயுடு 121 நாட் அவுட். இந்தியா 44.3 ஓவர்களில் 275/4 என்று வெற்றி பெற்றது.

இலங்கை இன்னிங்ஸ் விவரம்:

அகமாதாபாதில் நடைபெற்று வரும் 2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை முதலில் பேட் செய்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் 101 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழந்தார்.

கடைசி 40 பந்துகளில் 54 ரன்கள் எடுக்கப்பட்டது. தம்மிக பிரசாத் 28 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இறுதி ஓவர்களில் வித்தியாசமான அணுகுமுறை:

பொதுபாக பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று புதிய முயற்சி செய்து ஓரளவுக்கு வெற்றியும் கண்டனர். அதாவது இறுதி ஓவர்களில் ரவுண்ட் த விக்கெட் எடுத்து யார்க்கர்களை வீச முயன்றனர். இதில் ஓரளவுக்கு வெற்றி கண்டனர். 45-வது ஓவர் தொடக்கத்தில் கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் 77 ரன்கள் எடுத்திருந்தார்.

அவர் சதம் நிச்சயம் என்று நினைக்கையில், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் ரவுண்ட் த விக்கெட்டில் யார்க்கர்களை முயற்சி செய்தனர். இதனால் மேத்யூஸ் அடுத்த 14 பந்துகளில் 15 ரன்களையே எடுக்க முடிந்தது. அவரால் சதம் எடுக்க முடியாததோடு, ஸ்கோரும் 300 ரன்களுக்கு அருகில் செல்லாமல் தடுக்கப்பட்டது.

யார்க்கர் முயற்சியில் சில புல்டாஸ்கள் விழுந்தாலும் அது இடுப்புயர புல்டாஸாக இல்லாமல் தாழ்வான புல்டாஸாக அமைந்தது. இதனால் சிக்சர்கள் வாய்ப்புக் குறைந்தது. மேலும் உமேஷின் சில ரவுண்ட் த விக்கெட் யார்க்கர்கள் லெக் ஸ்டம்பிற்கு மிக அருகில் சென்றன. மேலும் யார்க்கர் அல்லாத பந்துகளும் வலது கை பேட்ஸ்மென்களுக்கு குறுக்காகச் சென்றதால் அந்தக் கோணங்களில் பவுண்டரி வாய்ப்பும் குறைந்தது. இந்த புதிய உத்தி எத்தனைப் போட்டிகளுக்குக் கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் உயர் ரிஸ்க் உள்ள உத்தியாகும் இது.

ஆனாலும் இன்றும் சிறப்பாகவும் சிக்கனமாகவும் வீசிய பெருமை இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலையே சாரும். இவர் 10 ஓவர் ஒரு மைடன் 39 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார். குறிப்பாக தில்ஷன் அபாரமாக ஆடி வந்தபோது அவரை 35 ரன்களில் பவுல்டு செய்தார். அதே போல் அதிரடி அபாய வீரர் திசர பெரேராவையும் 10 ரன்களில் பவுல்டு செய்தார். ஜடேஜா 10 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அஸ்வின் தொடக்கத்தில் தில்ஷனிடம் அடி வாங்கினார். ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் ஜெயவர்தனேயின் விக்கெட்டைக் கைப்பற்றி கடைசியில் சூரஜ் ரந்திவ் விக்கெட்டையும் கைப்பற்றி 49 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சங்கக்காரா 61 ரன்களுக்கு அற்புதமாக ஆடினார். ஆனால் உமேஷ் யாதவ் புல்டாஸை தூக்கி அடிக்க மிட் ஆனில் ஷிகர் தவன் அதனைக் கேட்ச் பிடித்தார்.

64/3 என்ற நிலையிலிருந்து மேத்யூஸ், சங்கக்காரா இணைந்து ஸ்கோரை 154 ரன்களுக்கு உயர்த்தினர். கடைசியில் பிரசாத், மேத்யூஸ் இணைந்து 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்களைச் சேர்த்தனர்.

135 போட்டிகளில் மேத்யூஸ் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இன்றும் சதம் எடுப்பதை இஷாந்த், உமேஷ் ஆகியோர் பந்து வீச்சு தடுத்தது.

இலங்கை 300 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் கூட வெற்றி வாய்ப்பு அரிதுதான் என்றே தெரிகிறது. ஏனெனில் இந்தியா 275 ரன்கள் இலக்கை மிகவும் முன்னதாகவே 45-வது ஓவரிலேயே முடித்துள்ளது.

3-வது ஒருநாள் போட்டி நவம்பர் 9ஆம் தேதி ஐதராபாதில் நடைபெறுகிறது.