செய்திகள்

ரிசாத் விலகியதையடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது மகிந்த அரசு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. பாராளுமன்றத்தில், மகிந்த ராஜபக்சஷ அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும், அமீர் அலி ஆகியோர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பலம், 148 உறுப்பினர்களாக குறைந்தள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு குறைந்தது 150 ஆசனங்கள் தேவையாகும். தற்போது, ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குத் தேவையான ஆசனங்களை விடவும், இரண்டு ஆசனங்கள் குறைவாக உள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எதிரணிக்குத் தாவியுள்ளனர். அதேவேளை, எதிரணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை அமீர் அலிக்கு வழங்கி, ரிசாத் பதியுதீனை தம்பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள ஆளும்கூட்டணி முயற்சித்தது.

எனினும், அந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்டு, ஆளும் கூட்டணியில் இருந்து, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி பக்கம் தாவியுள்ளது. இந்த நிலையிலேயே அரசாங்கம் இப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்திருக்கின்றது.