செய்திகள்

லிங்கா விவகாரம்: ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் வலுவான போராட்டம்: சிங்காரவேலன்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படம் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்த தவறியது. வசூலிலும் ஏமாற்றத்தையே தந்தது.இதனால் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி விநியோகஸ்தர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருந்தார்கள். ரஜினிக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

நிலைமையை உணர்ந்த ரஜினி இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டார். அவர் சார்பில் விநியோகஸ்தர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். தயாரிப்பாளர் சங்கமும் இதில் பங்கேற்றது. . பேச்சு வார்த்தை முடிவில் ரூ.12½ கோடி நஷ்ட ஈடாக விநியோகஸ்தர்களுக்கு அளிக்க முடிவானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் ரூ.5 கோடி தான் தரப்பட்டது என்றும், மீதி தொகையை இன்னும் தரவில்லை என்றும் வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு ரஜினி ஒரு படத்தில் நடித்து தருவார் என உறுதி மொழி அளிக்கப்பட்டது.ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் விநியோகஸ்தர் சிங்காரவேலனை கண்டித்து, சிங்காரவேலன் விளம்பரப் பிரியராக இருக்கிறார் என்று தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர் சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம் கூறியபோது, வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் தருவதாக ரஜினி யாரிடமும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கு விநியோகஸ்தர்கள் சிங்காரவேலன் உள்ளிட்ட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளும், எம்ஜி முறையில் பணம் போட்டவர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சிங்கார வேலன் பேசும்போது, லிங்கா நஷ்டஈடு பிரச்னையில் விநியோகஸ்தர்களுக்கு ரூ.12.50 கோடி ரஜினி தரப்பில் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், மீதித் தொகைக்கு வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு ரஜினி படம் பண்ணிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததால்தான் இந்த தொகையை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தோம். ஆனால், இப்போது ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை என்று இப்போது கூறுவது வியப்பாக உள்ளது. இந்த பிரச்னையில் ரஜினி தலையிட்டு சுமூக முடிவு எடுக்க முன் வரவேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்காவிட்டால் வலுவான போராட்டத்தை அறிவிப்போம் என்று கூறினார்.