செய்திகள்

“லிப்போ” ஆபரேஷனே ஆர்த்தி அகர்வால் மரணத்திற்கு காரணம்

 அமெரிக்காவில் மாரடைப்பால் காலமான நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணத்திற்கு அவருடைய தற்கொலை முயற்சி மட்டுமல்லாமல் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் காரணம் என்ற திடுக் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆர்த்தி அகர்வால்.கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார். 2007ஆம் ஆண்டில் கணினி பொறியியலாளர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் உடல் எடை கூடி பருமனாகிவிட்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து ஆலோசித்து வந்தார். மேலும் அவரின் உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் தெலுங்கு பட உலகில் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரின் பிரபல மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அவர் அடிக்கடி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோதே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜூன் 6 ஆம் தேதி காலை அவர் திடீர் மரணமடைந்தார். இச்சம்பவம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத் துறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எடைகுறைப்பு அறுவைச் சிகிச்சை தவறாக முடிந்ததால் நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னையில் கூட சமீபத்தில் ஒரு உடல் பருமன் உடைய இல்லத்தரசி, இதுபோன்ற லிப்போ ஆபரேஷனால் உயிரிழந்த சம்பவம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.