செய்திகள்

வங்கதேசத்தில் ஜமாத் தலைவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற வங்கதேசச் சுதந்திரப் போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு ஏராளமானோரைக் கொன்று குவித்தது, பலரை சித்ரவதைகளுக்கு ஆளாக்கியது ஆகிய குற்றங்களுக்காக, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவரான முகமது கமருஸ்மான் சனிக்கிழமை இரவு தூக்கிலிடப்பட்டார்.

போர்க்குற்றங்களுக்காக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் இக்கட்சியின் இரண்டாவது தலைவர் இவர் ஆவார். கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி இக்கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்.

முகமது கமருஸ்மானுக்கு, வெள்ளிக்கிழமையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. கடைசி நேரத்தில் அது தள்ளிவைக்கப்பட்டது.

இதனையடுத்து, உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 10.01 மணிக்கு முகமது கமருஸ்மான் தூக்கிலிடப்பட்டதாக, டாக்கா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் உதவிச் செயலாளரான முகமது கமருஸ்மான், கட்சியில் செல்வாக்கு மிக்க 3ஆவது தலைவராகத் திகழ்ந்தார். இவர் தூக்கிலிடப்படுவதையொட்டி, டாக்கா மத்திய சிறைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யும்படி, முகமது கமருஸ்மான் தாக்கல் செய்திருந்த மனுவை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதையடுத்து, ஜமாத் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இவருக்கு, கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், வங்தேசத்தின் சர்வதேசக் குற்றங்களுக்கான தீர்ப்பாயம் தூக்கு தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.